கலைத்திருவிழா போட்டிகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தவேண்டும் - அமைச்சர் ஆர்.காந்தி உத்வேக பேச்சு
காஞ்சிபுரம், நவ.11:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எஸ்.எஸ்.கே.வி.மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார்.எம்பி க.செல்வம்,எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன்,மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதந்மைக் கல்வி அலுவலர் த.வெற்றிச் செல்வி வரவேற்று பேசினார்.
கலைத்திருவிழா போட்டிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடக்கி வைத்து பேசியதாவது..
தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்திறனை வெளிக்கொணரும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகளில் ஒரு பகுதியாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கலைசார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டது.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி, வட்டாரம்,மாவட்டம் மற்றும் மாநில அளவிலும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மாநில அளவில் கலையரசன், கலையரசி என்ற பட்டத்திற்காக தேர்வானவர்கள் முதல்வர் கரங்களால் விருது பெற்றார்கள். மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த ஆண்டு கலைத்திருவிழா போட்டிகளில் பள்ளிகள் அளவில் 45380 பேர்,வட்டார அளவில் 11391,மாவட்ட அளவில் 2726,மாநில அளவில் 411 பேர் என தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் காஞ்சிபுரத்திலிருந்து தெருக்கூத்து, கோலாட்டம், வில்லுப்பாட்டு,அழகு கையெழுத்து ஆகிய போட்டிகளில் பங்கேற்றவர்கள் 2 வது இடம் பெற்று சாதனை புரிந்தார்கள்.
நிகழாண்டு சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற மையக்கருத்தின் அடிப்படையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.
தொடக்க விவாவில் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றியக் குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக உதவித் திட்ட அலுவலர் வெங்கடேசன் நன்றி கூறினார்.



No comments
Thank you for your comments