வாலிபர் கலெக்டர் வீட்டின் எதிரே உள்ள செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்ட குடும்பத்தினர் மீது தாக்குதல்.
இரண்டு மணி நேர பேச்சுவார்த்துக்குப் பின்னர் போலீசார் சமாதானப்படுத்தி மீட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகா பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பெருமாள் வெங்கடேசன் சகோதரர்கள். இவர்களுக்குச் சொந்தமாக பெரும்பாக்கத்தை அடுத்த முத்துவேடு கிராமத்தில் இரண்டரை ஏக்கர் நிலம் உள்ளது.
முத்துவேடு கிராம பாலாற்று படுகையில் மணல் திருட்டு நடைபெறுவதாக தெரிகிறது. இந்த நிலையில் பெருமாளின் விவசாய நிலம் படியாக மணல் திருட்டில் ஈடுபட முத்துவேடு கிராமத்தைச் சேர்ந்த விக்கி, ராஜேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் சென்று உள்ளனர்.
இதனைப் பார்த்த பெருமாள் தனது நிலத்தின் வழியாக மணல் திருட்டில் ஈடுபட செல்ல வேண்டாம் என தட்டி கேட்டு உள்ளார்.
இதனால் விக்கி, ராஜேந்திரன் மற்றும் அவர்கள் நண்பர்கள் பெருமாளை பலமாக தாக்கி உள்ளனர் இதனை கவனித்த வெங்கடேசன் சகோதரி அன்னம்மாள் தாய் தெய்வானை ஆகியோர் தடுத்த நிலையில் அவர்களையும் தாக்கி உள்ளனர்.
இச் சம்பவத்தில் பெருமாள் குடும்பத்தினர் காயமடைந்த நிலையில் பாலு செட்டி சத்திரம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
புகாரின் பேரில் பாலு செட்டி சத்திரம் போலீசார் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட மூவரை மட்டும் கைது செய்து உள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பெருமாள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வீட்டின் எதிரே உள்ள பிஎஸ்என்எல் செல்போன் டவர் மீது ஏறிக்கொண்டு போலீசார் கூடிய நடவடிக்கை மேற்கொண்டு தாக்குதல் நடத்திய 10 பேரையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் தீயணைப்புத் துறையினர், தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெருமாளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இருப்பினும் பாதிக்கப்பட்ட பெருமாள் சமாதானம் அடையாததால் ஏ.டி.எஸ்பி சார்லஸ் சாம் ராஜதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெருமாளுடன் பேச்சு வார்த்தை நடத்தி,உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் செல்போன் டவரில் இருந்த பெருமாள் சமாதானம் அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் உதவியுடன் பெருமாளை பத்திரமாக செல்போன் டவரில் இருந்து கீழே இறக்கி சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
No comments
Thank you for your comments