லஞ்ச ஒழிப்புத் துறையில் கைது செய்யப்பட்ட அதிகாரிக்கு 20 நாட்களுக்குள் மீண்டும் நியமனம் - மக்கள் கொந்தளிப்பு
சென்னை :
ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக கையூட்டாக பெறப்பட்ட ரூ.11.70 லட்சம் பணத்துடன் கையூட்டு தடுப்புப் பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை காத்திருப்போர் பட்டியலில் இருந்து 20 நாட்களுக்குள் திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமனம் வழங்கியதற்கு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி ஆணையாளராக கடந்த ஆகஸ்டு மாதம் ஜஹாங்கீர் பாஷா என்பவர் பொறுப்பேற்றார். இவர் கடந்த சில மாதங்களாக அனுமதி இல்லாத மற்றும் விதிமீறிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும் வாகனங்களை நிறுத்த தனியாருக்கு அனுமதி வழங்குவது உள்பட பல்வேறு செயல்களுக்கு பணம் வாங்கிக்கொண்டு அனுமதி வழங்கி வந்ததாக புகார்கள் எழுந்தது.
இந்தநிலையில் கடந்த நவம்பர் 9-ந் தேதி பணியை முடித்துக் கொண்டு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு ஜஹாங்கீர் பாஷா சென்று கொண்டிருந்திருக்கிறார். அவர் செல்லும் வழியில் சில இடங்களில் பணம் வாங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது
சோதனை - ரூ. 11.70 லட்சம்
இது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊட்டி-கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் ஆணையாளர் ஜஹாங்கீர் பாஷா சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது காரில் கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் இருந்தது.
பறிமுதல்
விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.
விசாரணை
பின், கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை நகராட்சி கமிஷனர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக இரவு, 8:00 மணிக்கு போலீசார் அழைத்து சென்றனர். விசாரணை இரவு, 11:00 மணிக்கு மேலாக தொடர்ந்தது. ஆனால் அவரால் கணக்கில் காட்ட முடியவில்லை என்று கூறப்படுகிறது. இச்சம்பவம் ஊட்டியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது .
வழக்குப்பதிவு :
இதனால் லஞ்ச பணம் என்பதை உறுதி செய்த நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜஹாங்கீர் பாஷா மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் :
20 நாட்களில் மீண்டும் நியமனம் :
இந்நிலையில் பரபரப்பு ஓய்வதற்குள்ளாகவே, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜஹாங்கீர் பாஷாவுக்கு 20 நாட்களில் மீண்டும் திருநெல்வேலியில் உதவி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை பொதுமக்களிடமும் சமூக ஆர்வலர்களிடமும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,
“ஜஹாங்கீர் பாஷா போன்ற லஞ்ச ஒழிப்பு துறையால் கைது செய்யப்பட்ட அதிகாரிகள் மீதான வழக்குகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளபோது, அவருக்கு பதவி வழங்குவது முற்றிலும் தவறானது. இவ்வாறான அதிகாரிகளுக்கு பக்கபலமாக செயல்படுவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்,” என வலியுறுத்தினர்.
திருவேற்காடு காவல் துறையில் புகார் :
மேலும், திருவேற்காடு நகராட்சியில் ஆணையராக ஜஹாங்கீர் பாஷா பணிபுரியும் போது, குப்பை அள்ளும் ஒப்பந்தத்திற்காக ரூ.10,00,000/- பெற்றதாகவும் மேலும் ஒப்பந்தத்திற்காக மாதந்தோறும் ரூ.3,00,000/- கேட்பதாவும் , இதனால் குருநாதன் என்பவர் தனக்கு குப்பை அள்ளும் ஒப்பந்தம் தேவையில்லை என பணத்தை திருப்பி கேட்டதற்கு தகாத வார்த்தையில் பேசி பிரச்சனை செய்வதாகவும் தனது பணத்தை மீட்டு தர தக்க நடவடிக்கை எடுக்குமாறு 16-12-2023 அன்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதுபோன்று தொடர்ச்சியாக லஞ்ச புகாரில் சிக்கும் நபருக்கு உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் இருந்து திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமனம் வழங்கியது ஏன்? இவருக்கு இவ்வாறு சலுகை வழங்கவேண்டிய அவசியம் என்ன? பின்னணியில் யார்? தலைமை அலுவலகத்தில் இவருக்கு ஆதரவாக செயலாற்றுவது யார்? என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது.
முன்னால் உலாவி நிற்கும் பல வழக்குகள் :
இந்தச் சம்பவம் கடந்த கால லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கைகளை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. பூந்தமல்லி, குன்றத்தூர், ஆவடி, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கைகளில் சிக்கிய பல அதிகாரிகள் நீண்டகாலமாக பணியில் அமர முடியாமல் உள்ளனர். ஆனால், ஜஹாங்கீர் பாஷாவுக்கு இந்த மிகைச் சலுகை எப்படி கிடைத்தது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
நகராட்சித் துறையின் பதில் நடவடிக்கைகள்:
இது தொடர்பாக நகராட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கும் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன் ஐஏஎஸ் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதனுடன், கூடுதல் இயக்குநர் விஜயகுமார் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது. ஆனால், இவ்விவகாரத்தில் உறுதியான முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதாலும் மக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
மக்களின் கோரிக்கை:
அண்மையில் பணி மீள நியமனத்துக்காக காத்திருக்கும் அதிகாரிகள் உள்ள நிலையில், ஜஹாங்கீர் பாஷாவிற்கு மட்டும் விரைவாக பதவி வழங்கப்பட்டதை கண்டித்து மக்கள் மற்றும் ஆர்வலர்கள், இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
.jpg)
.jpg)
No comments
Thank you for your comments