ஆவடி மாநகராட்சியில் தரமற்ற பணியால் குண்டும் குழியுமாக மாறிய புதிய சாலை! - உயிர் சேதம் ஏற்படும் அபாயம்! - வாகன ஓட்டிகள் அச்சம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் உள்ள பருத்திப்பட்டு சுந்தர சோழபுரம் சாலையில் தனியார் கல்லூரி மற்றும் தனியார் பள்ளி தொழில்நுட்ப கல்லூரி போன்றவை செயல்பட்டு வருகின்றன.
இந்த சாலையின் வழியாகத்தான் திருவேற்காடு அம்பத்தூர் போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்த வழியாகத்தான் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும்.
இந்த சாலை அமைத்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை இந்தநிலையில் சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது என்று பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளர்.

குண்டும் குழியுமான சாலைகளின் விளைவுகள்
போடப்பட்டு சில மாதங்களிலேயே சாலைகள் குண்டும், குழியுமாக மாறுவதால் பல பிரச்சனைகள் எழுகின்றன:
பாதுகாப்பு ஆபத்துகள்:
சாலைகளின் குண்டும் குழிகள் காரணமாக பயணிகள், குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள், விபத்துக்கு ஆளாகும் அபாயம் உள்ளது.
வாகனங்களின் சேதம்:
இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சாலைகளின் தீவிர நிலைமைகளால் சேதமடைந்து, வாகன உரிமையாளர்கள் அதிக செலவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர்.
சுகாதாரமற்ற சூழல்:
மேலும், குண்டும், குழியுமாக உள்ள சாலைகள் மழை காலங்களில் நீர்நிலைகள் உருவாகவும், இவை சுகாதார பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கின்றன. தற்போது பெய்துவரும் மழையால், நீர் தேங்குவதால் குழியின் ஆழம் தெரியாமல் வாகனங்கள் பெரும் விபத்துக்குள்ளாகின்றன. உயர் சேதம் ஏற்படும் பெரும் அபாயமும் உள்ளது.
மழைக்காலங்களில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் குற்றம் சாட்டுகின்றனர் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
சாலை அமைப்பதில் தரமற்ற பொருட்கள்
ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான பெரும்பாலான சாலைகள் எதுவுமே ஐந்து மாத காலம் கூட நீடிப்பதில்லை என்றும், சாலை அமைப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் தரம் குறைவானது என்றும், மாநகராட்சி கோரப்படும் டெண்டரின் விதிமுறைகளுக்கு மீறியதாக உள்ளது என்றும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாநகராட்சி அலுலவர்கள் ஆய்வு செய்கிறார்களா?
முறையாக மாநகராட்சி அலுலவர்கள் ஆய்வு செய்வதில்லை என்பதால்தான் ஒப்பந்த திட்டங்கள் தரமற்றதாக உள்ளது. சாலை அமைத்து ஒரு சில மாதங்களிலேயே பயனற்றதாகவும், குண்டும் குழியுமாகவும் சாலைகள் காட்சியளிக்கிறது என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுபோன்று சாலைகள் தரமற்றதாகவும், பயனற்றதாகவும் மாறினால் ஒப்பந்ததாரர்கள் மீதும், சாலையை முறையாக ஆய்வு செய்யாத மாநகராட்சி அலுவலர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு
இனியாவது மோசமான தரமான பொருட்களை தவிர்த்து, நிலையான மற்றும் தரமான பொருட்களை பயன்படுத்த வேண்டும். குண்டும், குழியுமான பகுதிகளை சீரமைத்து, சாலைகளின் நீடித்த தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் உரிய பதில் கொடுத்து, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி, பொதுமக்களின் குற்றச்சாட்டுக்களை மிகுந்த கவனத்துடன் எடுத்துக் கொண்டு, நிலையான சாலைகள் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது அவசியமாகிறது. இது மட்டுமின்றி, பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான பாதையை திறக்கவும் செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது மழைக்காலம் என்பதால் உடனடியாக இந்த சாலை சீரமைக்கப்படுமா? என்று கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மாநகராட்சி செவி சாய்க்குமா... என்பதை பொருத்திருந்து பார்ப்போம்..
No comments
Thank you for your comments