தேசிய கைத்தறி தின விழா - நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் அன்பரசன்
காஞ்சிபுரத்தில் கைத்தறி துறை சார்பில் நடைபெற்ற 10-வது தேசிய கைத்தறி தின விழாவில் இன்று (07.08.2024) மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் 80 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ. 1,11,70,115/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் 20 கைத்தறி நெசவாளர்களுக்கு மாத ஓய்வூதியத்திற்கான ஆணைகளையும் வழங்கினார்கள்.
கைத்தறி கண்காட்சியினை திறந்து வைத்து மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் 1905-ம் ஆண்டு கொல்கத்தா டவுன் ஹாலில் ஆகஸ்ட் திங்கள் 7-ஆம் நாள் நடைபெற்ற கூட்டத்தில் அந்நிய நாட்டு பொருட்கள் மறுப்பு மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யும் பொருட்களை பயன்படுத்தும் நோக்கமாக சுதேசி இயக்கம் துவங்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் 2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதியில் தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை 07.08.2024 முதல் 09.08.2024 வரை காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி ஜவுளிகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்படுகிறது. இதில் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அசல் பட்டு சேலை ரகங்கள், சேலம் பட்டு வேட்டிகள், ஈரோடு பெட்சீட் ரகங்கள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், தலையணை உறைகள், மேட் ரகங்கள், பரமக்குடி காட்டன் சேலைகள், பம்பர் காட்டன் சேலைகள், திருப்பூர் துண்டுகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள், கோயம்புத்தூர் காட்டன் சேலைகள் ஆகிய கைத்தறி ரகங்களுக்கு அரசு 20% தள்ளுபடியில் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சி இந்திய கைத்தறியின் வளமான பாரம்பரியத்தை பிரதிபலிக்கவும், கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையினை மேம்படுத்தவும் தமிழ்நாடு கைத்தறி துறையால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். பொதுமக்கள் அனைவரும் கைத்தறி ஆடைகளை வாங்கி அணியுமாறும் இளம் தலைமுறையினர் கைத்தறி நெசவு தொழிலினை மேற்கொள்ள முன்வர வேண்டும் எனவும் அனைவருக்கும் 10-வது தேசிய கைத்தறி நாள் நல்வாழ்த்துகளை என மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
Also Read 🔥 ஆகஸ்ட் 8: பல விதமான துன்பங்கள் நீங்கும் நாக சதுர்த்தி, கருட பஞ்சமி ... வழிபாட்டு முறை மற்றும் நேரம்
இதனை தொடர்ந்து பாரம்பரிய காஞ்சிபுரம் ரக சேலைகளை உற்பத்தி செய்து வரும் திறன்மிகு 10 நெசவாளர்களை கௌரவித்து, மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி மற்றும் கைத்தறி துறை இணைந்து 60 கைத்தறி நெசவாளர்களுக்கு “நெசவாளர் முத்ரா“ திட்டத்தின் கீழ் தலா ரூ.1,25,000/- வீதம் ரூ.75 இலட்சம் மதிப்பிலான கடனுதவி ஆணைகளும், தமிழ்நாடு அரசு கைத்தறி துறையின் நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 20 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.36.70 இலட்சத்திற்கான பாதுகாப்பு திட்ட காசோலைகளும் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறி துறையின் நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 20 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.1200/- வீதம் மாத ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், கைத்தறி துறை துணை இயக்குநர் திரு.ச.மணிமுத்து, காஞ்சிபுரம் கைத்தறி கட்டுப்பாட்டு அலுவலர் திரு.ரே.மோகன். உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments