ஆவடியில் பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்த போது விஷவாயு தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி
பூந்தமல்லி :
ஆவடியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட போது, மூச்சுத்திணறி ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தார்.
ஆவடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைக்குள் எற்படும் அடைப்புகளை நீக்குவதற்கு 4 மண்டலங்களில் தனியார் ஒப்பந்த நிறுவனம் பணிகள் செய்ய ஆணை வழங்கப்பட்டு உள்ளது .
அதன்படி ஆவடி மாநகராட்சி, 3 மண்டலத்துக்கு உட்பட்ட 42-ஆவது வார்டில் உள்ள சரஸ்வதி நகர், குறிஞ்சி தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த அடைப்பை சரி செய்ய ஆவடி, அருந்ததிபுரம், 4-ஆவது தெருவைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் கோபி (வயது 25) உள்ளிட்ட 3 பேர் அடைப்பு நீக்கும் இயந்திரம் மூலம் சம்பவ இடத்திற்கு நேற்று சென்றனர்.
அங்கு பாதாள சாக்கடை மூடியை திறந்து உள்ளே கோபி இறங்கி, அடைப்பு நீக்கும் இயந்திரத்தின் குழாயை இணைக்கும் பணியில் ஈடுபட்ட போது, மூச்சுத்திணறி தவறி 25 அடி ஆழத்திற்குள் விழுந்துள்ளார்.
இதைப் பார்த்த உடன் வேலை செய்தவர்கள் அவரை மீட்க முடியாமல் திகைத்தனர். உடனே , தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பாதாள சாக்கடைக்குள் இறங்கி கோபியை மீட்டனர். ஆனால் கோபி இறந்த நிலையில் கிடந்தார்.
உடனே இதுபற்றி ஆவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து கோபியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றி இறந்து போன கோபியின் தந்தை சேகர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
No comments
Thank you for your comments