மனதுக்கு அமைதியை தரும் அற்புதக் கலையே யோகா,காஞ்சிபுரம் எஸ்பி பேச்சு
காஞ்சிபுரம், ஜூலை 28:
மனதுக்கு அமைதியையும்,உடலுக்கு அழகையும் தரும் அற்புதக் கலையே யோகா என காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் கலந்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தென்னிந்திய யோகாசனப் போட்டிகளை தொடக்கி வைத்து பேசும் போது குறிப்பிட்டார்.
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயணகுரு யோகாசன மையம்,காஞ்சிபுரம் மாவட்ட அமெச்சூர் யோகா கூட்டமைப்பு மற்றும் தேசிய யோகா கூட்டமைப்பு ஆகியன இணைந்து காஞ்சிபுரம் மேட்டுத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்னிந்திய அளவிலான யோகாசனப் போட்டிகளை நடத்தினார்கள்.
ஜூலை.27 ஆம் தேதி சனிக்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் அளவிலும், மறுநாள் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2 வது நாளாக தென்னிந்திய அளவில் 7 மாநிலங்களை சேர்ந்த 1250 வீரர்கள் பங்கேற்ற யோகாசனப் போட்டிகள் நடைபெற்றது. 3 வயது முதல் 36 வயதுக்கு உட்பட்டோர் போட்டிகளில் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் எஸ்பி கே.சண்முகம் கலந்து கொண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 28 யோகா வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கியும் போட்டிகளை தொடக்கி வைத்தும் பேசியது.
யோகா என்பது மனதுக்கு அமைதியையும்,உடலுக்கு அழகையும் தரும் ஒரு அற்புதக் கலை.உடற்பயிற்சியும்,யோகா பயிற்சியும் வெவ்வேறாகும்.உடற்பயிற்சியை விட யோகா பயிற்சி சிறந்தது.எண்ணத்தையும், சிந்தனையையும் ஒருங்கிணைக்கும் கலையாகும்.இக்கலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து தான் தற்போது காவல்துறை உள்பட பல அரசுத்துறைகளிலும் யோகாசனம் கற்றுத்தரப்படுகிறது.
இக்கலையில் வெற்றி பெற கடின உழைப்பும், பயிற்சியாளரின் தியாக மனப்பான்மையுடன் கூடிய திறமையும் அவசியம் என்றும் அவர் பேசினார்.
விழாவிற்கு யோகா கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் தி.யுவராஜ் தலைமை வகித்தார்.வேலம்மாள் பள்ளியின் முதல்வர் சுரேஷ்குமார்,சாய் வித்யாலயா பள்ளியின் தாளாளர் அறிவுக்கனல், அதிமுக பிரமுகர் வள்ளிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடற்கல்வி ஆய்வாளர் முத்துவேல் வரவேற்று பேசினார்.
தேசிய யோகா கூட்டமைப்பின் தலைவர் ராதா கிருஷ்ணன் கலந்து கொண்டு யோகா கற்றுக்கொள்வதால் கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கி பேசினார். நிறைவாக வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
No comments
Thank you for your comments