Breaking News

ஜூலை 19ல் விவசாயிகளின் நலன் காக்கும் கூட்டம் - கலெக்டர் கலைசெல்வி மோகன் அறிவிப்பு

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜூலை 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 19.07.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  கலைச்செல்வி மோகன்  தெரிவித்துள்ளதாவது, 


இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். 

ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். 

பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் e-kyc மூலம் பி.எம். கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025-ம் ஆண்டு காரீப் பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அறிவிப்பு வரப்பெற்றுள்ளது. 

நெல் பயிர் 223 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை எக்டர் ஒன்றுக்கு நெல் பயிருக்கு ரூ.1,704 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அறிவிக்கை செய்யப்பட்ட காப்பீடு அலகுகளில் காப்பீடு பதிவு செய்ய இயல்பான விதைப்பு பருவம் நெல் பயிருக்கு ஏப்ரல், மே, ஜூன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற பதிவு செய்ய கடைசி நாள் ஜூலை 31  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும்,  2024-2025-ம் ஆண்டு பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி இந்தியா லிமிடெட், பொதுக்காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முன்மொழிவு படிவம், பதிவு படிவம், சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் விதைப்புச் சான்று, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். 

விருப்பமுள்ள விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்யலாம். மேலும், விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments

Thank you for your comments