ஜூலை 10-ல் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் - இன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமல்
விழுப்புரம்:
விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எம்எல்ஏ புகழேந்தி மறைவு
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ.,வும், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி கடந்த ஏப்ரல் 5ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் விக்கிரவாண்டி அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி புகழேந்தி ஏப்ரல் 6ம் தேதி காலமானார்.
எம்எல்ஏ புகழேந்தி மரணம் குறித்து சட்டசபை செயலகம் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலி என தேர்தல் ஆணையம் உடனடியாக அறிவித்தது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்றது. 7ம் கட்ட தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
ஜூலை 10ல் இடைத்தேர்தல்:
இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் ஜூலை 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு ஜூன் 21ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13 தொகுதிகளில் இடைத்தேர்தல்
நாடு முழுவதும் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிவிப்பை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் விக்கிரவாண்டி பெயரும் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இன்று முதல் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்கும் தொகுதி மட்டுமல்லாமல், தேர்தல் நடத்தை விதிகள் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இடைத்தேர்தல் நடக்கும் விழுப்புரம் மாவட்டத்திற்கு புதிய திட்டங்களை அரசு அமல்படுத்தக் கூடாது.
பழைய திட்டங்களைச் செயல்படுத்த அரசிற்கு எந்த தடையும் இல்லை. 50,000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் ரொக்கமாக கொண்டு சென்றால் ஆவணம் வைத்திருக்க வேண்டும். இடைத்தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவத்தினர் விரைவில் தமிழகம் வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட EVM இயந்திரம் இடைத்தேர்தலுக்குப் பயன்படுத்தப்படாது" என தெரிவித்துள்ளார்.
Click here Notification: Schedule for bye-election to 13 Assemblies Constituencies of 7 States
No comments
Thank you for your comments