காஞ்சிபுரத்தில் தலைவர்கள் தோற்றத்தில் வந்த கலைஞர்கள்!
காஞ்சிபுரம், ஏப்.6:
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரான க.செல்வம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.இவர் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தலைமையிலும்,காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன்,மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாநகர செயலாளர் சி.கே.டி.தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் கட்சியின் நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் ஒன்றாக ஊர்வலமாக சென்று வேட்பாளர் க.செல்வத்துக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இவர்களுக்கு பின்னால் வந்த வாகனத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி,தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் ஆகியோர் வாக்கு கேட்டு வந்தது பலரையும் வியந்து பார்க்க வைத்தது.
தலைவர்கள் போன்ற தோற்றத்தில் இருந்தவர்களை அழைத்து வந்த தஞ்சாவூரை சேர்ந்த திமுக பேச்சாளரான ஹாஜி முகம்மது கூறுகையில் முதலமைச்சர் ஸ்டாலின் தோற்றத்தைப் போலவே இருப்பவர் சேலத்தை சேர்ந்த செய்யது,முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போன்ற தோற்றம் உள்ளவர் ஜோலார்பேட்டையை சேர்ந்த குட்டி கலைஞர் என அழைக்கப்படுபவர்.கமலஹாசன் போன்ற தோற்றத்தில் இருப்பவர் ஈரோட்டைச் சேர்ந்த கதிர்கமல் என்பவர்.
இவர்கள் மூவரும் இயற்கையாகவே தலைவர்கள் போன்ற தோற்றத்தில் இருப்பவர்கள். ஒப்பனை எதுவும் செய்யவில்லை என்றும் ஹாஜி முகம்மது தெரிவித்தார்.
No comments
Thank you for your comments