காஞ்சிபுரத்தில் முதன்மை நீதிமன்றம் உட்பட நீதிமன்றங்கள் திறப்பு விழா - உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம், மார்ச் 3:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகியன ஒருங்கிணைந்த மாவட்டங்களாக இருந்த போது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும், தலைமைக் குற்றவியல் நீதிமன்றமும் செங்கல்பட்டில் செயல்பட்டு வந்தன.
மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகும் இவ்விரு நீதிமன்றங்களும் செங்கல்பட்டிலேயே செயல்பட்டு வந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியாக இவ்விரு நீதிமன்றங்களும் தொடங்கப்பட வேண்டும் என வழக்குரைஞர்களும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டில் செயல்பட்டு வந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும், தலைமைக் குற்றவியல் நீதிமன்றமும் காஞ்சிபுரத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு அதன் தொடக்க விழா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த 100 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான நீதிமன்றக் கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பித்து அக்கட்டிடத்திலேயே மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் குத்து விளக்கேற்றி புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை தொடக்கி வைத்தார். பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் வழக்குகளை விசாரிக்கும் பணியினை தொடங்கினார்.
நீதிமன்ற திறப்பு விழாவின் தொடர்ச்சியாக இதற்கான சிறப்புக் கூட்டம் காஞ்சிபுரத்தை அடுத்த செவிலமேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் தலைமை வகித்து நீதிமன்றங்கள் திறப்புக்கான அடிக்கல்லை ரிமோட்டை இயக்கி தொடக்கி வைத்தார்.
கூட்டத்திற்கு மற்றொரு காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு நீதிபதியும்,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியுமான கிருஷ்ணன் ராமசாமி, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி,மாவட்ட ஆட்சியர்கள் கலைச்செல்வி மோகன்(காஞ்சிபுரம்) ராஷ்மி சித்தார்த் (சென்னை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான முதன்மை நீதிபதி ஜெ.மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அனைவரையும் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல்,எஸ்பி கே.சண்முகம், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், எம்எல்ஏ எழிலரசன், பொதுப்பணித் துறை சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் ஆயித்தரசு ராஜசேகரன், செயற்பொறியாளர் சிவ.சண்முகம், வழக்குரைஞர்கள் சங்க தலைவர்கள் இ.ஹரிதாஸ், கார்த்திகேயன், எஸ்.சிவகோபு ஆகியோர் உட்பட நீதிபதிகள், வழக்குரைஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கான தலைமைக் குற்றவியல் நீதிபதி தி.ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.
இதே கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்க நல்லூரில் செயல்படவுள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றமும் ரிமோட் மூலம் இயக்கப்பட்டு அதற்கான கல்வெட்டும் திறந்து வைக்கப்பட்டது.
No comments
Thank you for your comments