திமுக-அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு : புதுமுகங்கள்-வாரிசுகளுக்கு வாய்ப்பு
சென்னை, மார்ச் 21-
தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. வேட்புமனு தாக்கல் நேற்று (புதன்கிழமை) தொடங்கியுள்ளது.
திமுக
முதன்முதலாக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கிய திமுக, கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடங்களை ஒதுக்கி தொகுதி பங்கீட்டையும் முதலில் நிறைவு செய்தது. திமுகவை பொருத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம்காண்கிறது.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள், ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததன் மூலம் திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.
11 புதுமுகங்கள்
புதிய வேட்பாளர்களாக 11பேர் அறிவிக்கபட்டுள் ளனர். 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்கறிஞர்கள், 2 முனைவர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
வாரிசுகள்
வாரிசுகள் அடிப்படையில் பார்த்தால் எதிர்பார்க் கப்பட்டது போலவே அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேலூர் தொகுதியில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள், தவிர கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
அதிமுக
மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி,
“மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி அபார வெற்றி பெறும். அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு கூடியுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்” என்றார்.
இந்த தேர்தலை பொறுத்தவரை பொதுச் செயலாளர் பழனிசாமியும் தன் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் முதல் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தனது வீட்டில் நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனை நடத்தினார். அதில் தேமுதிகவுடனான கூட்டணி, மற்ற கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவது, வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்படி, தற்போது 16 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.


No comments
Thank you for your comments