Breaking News

காஞ்சிபுரத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல் - பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை

காஞ்சிபுரம்,மார்ச் 19:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூரிலும்,வையாவூரிலும் பறக்கும்படை அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் மொத்தம் ரூ.8 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது தெரிய வந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


காஞ்சிபுரம் அருகேயுள்ள வையாவூரிலும்,உத்தரமேரூரிலும் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது இரு இடங்களிலும் பிரபல நகைக்கடை ஒன்றின் வாகனம் அவ்வழியாக வந்ததை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில் தங்கம், வெள்ளி நகைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உத்தரமேரூரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தில் ரூ.2 கோடி மதிப்பிலும், வையாவூரில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம்,வெள்ளி நிகைகள் இருந்தன.பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு வாகனங்களும் காஞ்சிபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன.

காஞ்சிபுரம் கோட்டாட்சியர் மு.கலைவாணி,வருமான வரித்துறை ஆய்வாளர்கள் ராஜா,கிருஷ்ணமூர்த்தி,தீபா ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் இரு வாகனங்களிலும் இருந்த பெட்டகங்களை ஒவ்வொன்றாகவும் தனித்தனியாகவும் பிரித்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து சோதனையிட்டனர். 

அதில் தங்க வளையல்கள், தங்கக் கொளுசுகள்,வெள்ளிக் கொளுசுகள்,வெள்ளிப் பரிசுப் பொருட்கள் ஆகியனவும் இருந்தன.இச்சோதனையானது செவ்வாய்க்கிழமை நீண்ட நேரம் நீடித்தது.

இது குறித்து காஞ்சிபுரம் கோட்டாட்சியர் மு.கலைவாணி கூறியதாவது

பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டதை பிரித்து அவற்றுக்குள் என்ன இருக்கிறது என்று பரிசோதித்து வருகிறோம்.பிரபலமான நகைக்கடை ஒன்றின் தங்க,வெள்ளி நகைகள் எனத் தெரிய வந்துள்ளது.

அவர்கள் லாரியில் கொண்டு வந்த பொருளுக்கும் அவர்களிடமிருக்கும் ரசீதும் சரியாக இருந்தால் பொருட்களை முறையாக அவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவோம். அதே நேரத்தில் ரசீதுக்கும், பொருளுக்கும் வேறுபாடு இருந்தால் அந்தப் பொருட்கள் அனைத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து விடுவோம் எனவும் தெரிவித்தார்.

 

No comments

Thank you for your comments