Breaking News

காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியதுன

காஞ்சிபுரம்,பிப்.15:

மகாசக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலின் வருடாந்திர பிரமோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி இன்று ஸ்தானீகர்கள் கொடிமரத்தில் திருவிழாக்கொடியினை ஏற்றிய காட்சி. 
 

அயோத்தி மன்னர் தசரதன் புத்திர காமேஷ்டி யாகம் செய்து ராமர் பிறந்த பெருமைக்குரியதும்,மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இருந்து வரும் பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் திருக்கோயில். 

இக்கோயிலின் வருடாந்திர பிரமோற்சவத்தையொட்டி சிம்ம வாகனத்தில் காமாட்சி அம்மன் அமர்ந்திருப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்ட கொடியானது சிறிய பல்லக்கில் வைத்து மங்கல மேள வாத்தியங்களுடன் ஆலய வளாக சுற்றுப்பிரகாரத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

 வெள்ளி ரிஷப வாகனத்தில் லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் வீதியுலா வந்த காமாட்சி அம்மன் 

இதன் பின்னர் கோயில் ஸ்தானீகர்களால் தங்கக் கொடிமரத்தில் திருவிழாக்கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனைளும் நடந்தன.

இதனையடுத்து கொடி மரத்தின் முன்பாக 108 தேங்காய்கள் உடைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக லட்சுமி,சரஸ்வதி தேவியருடன் காமாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வந்தார்.கொடியேற்றத்தையொட்டி வாண வேடிக்கைகளும் நடைபெற்றன.

கொடியேற்ற விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.மூலவர் காமாட்சி அம்பிகை தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவினையொட்டி தினசரி காலையிலும்,மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார்.

நிகழ் மாதம் 18 ஆம் தேதி தங்க சூரியபிரபை வாகனத்திலும்,வரும் 23 ஆம் தேதி இரவு வெள்ளித் தேரிலும் காமாட்சி அம்மன் பவனி வரவுள்ளார்.வரும் 25 ஆம் தேதி விடையாற்றி உற்சவம் தொடங்கி வரும் மார்ச் மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

மார்ச் 6 ஆம் தேதி பூப்பல்லக்கில் காமாட்சி அம்பிகை அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வருவதுடன் விழா நிறைவு பெறுகிறது.


No comments

Thank you for your comments