ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது- அமலாக்கத்துறை நடவடிக்கை
ராஞ்சி :
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
விசாரணை
நிலமோசடி தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதைத் தொடர்ந்து, நில மோசடி தொடர்பான வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை பலமுறை சம்மன் அளித்திருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை. இதன் தொடர்ச்சியாக, ராஞ்சி இல்லத்தில் மீண்டும் இரண்டாவது முறையாக ஹேமந்த் சோரனிடம் இன்று பகல் 1.30 மணியளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது.
பணம் பறிமுதல்
இதற்கிடையே, கடந்த திங்கள்கிழமை டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 36 லட்சம் ரொக்கம், சொகுசு கார், சில முக்கிய ஆவணங்கள் அமலாக்கத்துறையால் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கைது
இந்த நிலையில், ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
அமலாக்கத்துறை விசாரணையை தொடர்ந்து அவரை கைது செய்தனர். இதற்கிடையே தனது ராஜினாமா கடிதத்தை அவர் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments
Thank you for your comments