Breaking News

அயோத்திக்கும், காஞ்சிக்கும் நெருங்கிய தொடர்புகள் அதிகம் - காமாட்சி அம்மன் கோயில் நிர்வாகிகள் தகவல்

காஞ்சிபுரம், ஜன.19:

அயோத்திக்கும், காஞ்சிக்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதற்கான சான்றுகள் பல புராணங்களிலும், கல்வெட்டுக்களிலும் இருப்பதாக காமாட்சி அம்மன் கோயில் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.


இது குறித்து காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயர், கோயில் செய்தித் தொடர்பாளரும், சங்கரா கல்லூரி முதல்வருமான கே.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

படவிளக்கம் : ந.சுந்தரேச ஐயர் மற்றும் கே.ஆர்.வெங்கடேசன்

அயோத்தி மன்னர் தசரதர் குழந்தை இல்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த போது அவரது குலதெய்வமான திரிபுரசுந்தரி அம்மன் அசரீரியாக அவரது கனவில் தோன்றி காஞ்சிபுரத்தில் காமாட்சி அம்மனை தரிசித்தால் குழந்தைகள் பிறக்கும் என்று கூறியுள்ளார்.

அதன்படி தசரத மன்னர் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார்.அதன்பிறகு தான் காமாட்சியின் அருளால் தசரத மன்னருக்கு ராமர் பிறந்தார்.

இதற்கான சான்றுகள் கல்வெட்டுக்களாகவும்,சிலை வடிவங்களாகவும் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் வசந்த மண்டபத்தில் உள்ளன. இச்செய்திகள் பிரம்மாண்ட புராணம் மற்றும் லலிதா பாக்யானம் ஆகிய புராண நூல்களில் விரிவாக பாடல்களாக இருக்கின்றன.

அயோத்தியும், காஞ்சிபுரமும் மோட்சபுரிகள்,அது மட்டுமின்றி இரண்டும் பிருத்வி ஸ்தலங்கள்.இவையிரண்டுக்கும் இடையே இப்படி ஒரு சிறப்பும் உள்ளது.ராமஜென்மபூமி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர காஞ்சி சங்கராசாரியார்கள் பேருதவியாக இருந்திருக்கிறார்கள்.

அயோத்தி கோயில் கட்டுமான தொடக்கத்தின் போது காஞ்சி சங்கர மடத்திலிருந்து குடை,வெண் சாமரம் ஆகியன விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 

தற்போதுள்ள காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திரர் அயோத்தி கோயில் பூமி பூஜையின் போது கருங்காலி மரத்தால் செய்யப்பட்ட சங்கு, வெள்ளித்தாம்பாலம், வெள்ளிக் காசுகள்,புனிதமான ஆலயங்களிலிருந்து சேகரித்த மணல்,ஸ்ரீராம் எனப் பொறிக்கப்பட்ட செங்கற்கள் ஆகியனவற்றை கொடுத்து அனுப்பினார்.

ஸ்ரீவிஜயேந்திரர் அண்மையில் காசியில் முகாமிட்டிருந்த போது ராமஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயேந்திரரை சந்தித்து ராமர்சிலை பிரதிஷ்டை தொடர்பான ஆலோசனைகளை பெற்றுச்சென்றனர். 

யாகசாலை பூஜைகளை நடத்துவோர் மற்றும் 150க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் காஞ்சி சங்கர மடத்தின் சார்பில் அயோத்தி கோயில் பிரதிஷ்டை விழாவினை சிறப்பாக நடத்திட அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இப்படியாக அயோத்திக்கும், காஞ்சிக்கும் பல நெருங்கிய தொடர்புகள் இருந்து வருவதால் காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் வசந்த மண்டபத்தில் வரும் 22 ஆம் தேதி அயோத்தி கோயில் நிகழ்வுகள் நேரலையாக ஒலிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பஜனைகள், ராமசங்கீர்த்தனம் ஆகியனவும் நடைபெறும்.சுமார் 1000 பேர் நிகழ்வில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதே நாளில் தசரதர் செய்த புத்திரகாமேஷ்டி யாகம்,வாலி வதம் உள்ளிட்டவை ஆலயத்தில் சான்றுகளாக இருந்து வருவதை பொதுமக்கள் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இருவரும் தெரிவித்தனர்.


No comments

Thank you for your comments