Breaking News

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்: நாளை மாலை தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம்

சென்னை: 

தேமுதிக தலைவரும், தமிழ்த் திரைப்பட நடிகருமான விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை 6:10 மணிக்கு காலமானார். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், நாளை மாலை 4.45 மணியளவில் விஜயகாந்த்தின் நல்லடக்கம் நடைபெறும் என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் முடிந்து திங்கள்கிழமை (டிச.11) வீடு திரும்பினாா். சிகிச்சைக்குப் பிறகு அவா் பூரண குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை(டிச.26) மாலை அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான பரிசோதனை :

இதனிடையே, விஜயகாந்த் 19 நாள்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவா் பூரண நலத்துடன் இருக்கிறாா். பரிசோதனை முடிந்து, இன்று வியாழக்கிழமை(டிச.28) வீடு திரும்புவாா் என்று தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

செயற்கை சுவாசம் :

இந்த நிலையில், வழக்கமான பரிசோதனையின் முடிவில் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் செயற்கை சுவாசம்(வெண்லேட்டர்) சிகிச்சை கொடுக்கப்படுவதாக தேமுதிக தரப்பில் இன்று காலை அறிக்கை வெளியிடப்பட்டது.

விஜயகாந்த் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியானது.

சிகிச்சை பலனின்றி உயரிழந்தார் :

இந்த நிலையில், செயற்கை சுவாசம்(வெண்லேட்டர்) சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே இன்று காலை உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 

“நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உயிரிழந்த தகவலை அடுத்து மருத்துவமனை அலுவலகம் முன்பு குவிந்திருந்த தொண்டர்கள் கேப்டன் என கதறி அழுதனர். 

இந்த செய்தியைக் கேட்டது முதல், தேமுதிக தொண்டர்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் குவியத் தொடங்கினர்.

மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள இல்லத்துக்கு மறைந்த விஜயகாந்த் உடல் கொண்டு வரப்பட்டது.  

பொதுமக்கள் அஞ்சலி :

பிறகு, விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டு வரப்பட்டது. நாளை வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் மறைவை அடுத்து அரசியல் தலைவர்கள், சினமா பிரபலங்கள் என  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 பொது இடத்தில்  நல்லடக்கம் செய்ய கோரிக்கை :

எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்ட விஜயகாந்த் உடலை பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் எல்கே சுதீஷ் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பொது இடத்தில் அடக்கம் செய்யும் கோரிக்கை மறுக்கப்பட்டது. 

அதேநேரம், ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக விஜயகாந்த் உடல் வைக்கப்பட குடும்ப உறுப்பினர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. 

தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம்:

ஆனால் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி மற்றும் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய குடும்ப உறுப்பினர்கள் முடிவெடுத்தன் பேரில் அங்கே உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அங்கே அவரது உடல் நாளை (வெள்ளி) மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.45 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. . இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளன.

அரசு மரியாதை: 

முன்னதாக, விஜயகாந்த் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். அந்த இரங்கல் குறிப்பில், விஜயகாந்த் இறுதிப் பயணத்துக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரின் இல்லத்துக்கு நேரில் சென்ற விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோர் சென்று அஞ்சலி செலுத்தினர்.




No comments

Thank you for your comments