Breaking News

வெள்ள பாதிப்புகளை தடுக்க காஞ்சிபுரத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது - அமைச்சர் சு.முத்துச்சாமி பேட்டி

காஞ்சிபுரம், டிச.3:

மழை மற்றும் புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்றத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்ய கடந்த இரண்டரை ஆண்டுகளில் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மட்டும் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் இடங்கள் எவை என்பதை அறிந்து அந்த இடங்ளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பின்னர் அமைச்சர் சு.முத்துச்சாமி இது குறித்து மேலும் கூறியது.

மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் 72 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மழை,வெள்ளப் பாதிப்புகளை தடுக்க 21 மண்டலக் குழுக்கள்,2 தேசிய பேரிடர் மீட்பு படை குழுவில் மொத்தம் 56 பேர்,மாநில பேரிடர் மீட்புப் படையினர் 35 பேர் தயார் நிலையில் உள்ளனர்.எந்த நேரத்திலும் மக்களைக் காக்க தயாராக இவர்கள் உள்ளனர்.15 ஆயிரம் மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 80 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பியிருக்கின்றன.வெள்ளத்தால் பாதிக்கப்படும் மக்களுக்காக 62 நிவாரண முகாம்கள்,24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை, புதிதாக 3100 மின்கம்பங்கள்,1306 மின்மாற்றிகள்,12 படகுகள் ஆகியனவும் தயார் நிலையில் உள்ளன.மழை அல்லது காற்றால் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதை மிகக்குறுகிய காலத்தில் சரி செய்யத் தயாராகவே இருக்கிறோம்.மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசிப்போரை நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் போது வீட்டில் உள்ள பொருட்கள் திருடு போகாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு மட்டும்,மழை,புயல்,வெள்ளம் ஆகியனவற்றிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்கத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்ய கடந்த இரண்டரை ஆண்டுகளில் அரசு ரூ.300 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.அதனால் தான் மாவட்டத்தில் எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் உள்ளது.செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.வேகவதி ஆற்றங்கரையில் வசிப்பவர்களுக்கு தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள் மழைக்காலம் முடிந்தவுடன் அவர்கள் மீண்டும் அதே வசிப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.மழைக்காலம் முடிந்த பிறகு நிரந்தரமாக அவர்களை அனைத்து வசதிகளோடும் வேறு இடத்தில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சர் சு.முத்துச்சாமி தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன்,எஸ்பி எம்.சுதாகர்,எம்எல்ஏ க்கள் க.சுந்தர்,எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,தேசிய பேரிடர் மீட்பு படை ஆய்வாளர் ரோபின்குமார், திட்ட இயக்குநர் சா.செல்வக்குமார் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள், தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் உட்பட பலரும் உடன் இருந்தனர்.


No comments

Thank you for your comments