அரசு பஸ்சை வழிமறித்து மாணவர்களை தாக்கியது ஏன்? - நடிகை ரஞ்சனா பேட்டி
சென்னை :
அரசு பஸ்சை வழிமறித்து மாணவர்களை தாக்கியது ஏன் என்பது குறித்து கைதான நடிகை ரஞ்சனா பேட்டி அளித்தார்.
படிக்கட்டில் பயணம்
சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கி சென்ற அரசு பஸ்சில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்தனர். இதனை கண்ட பெண் ஒருவர் அரசு பேருந்தை வழிமறித்து டிரைவர் மற்றும் நடத்துனரை அவதூறாக பேசிவிட்டு பள்ளி, மாணவர்களை அடித்து இறக்கி விட்டார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இது குறித்து மாங்காடு போலீசார் மாணவர்களை தாக்கி அரசு பேருந்தை வழிமறித்த பெண் யார் என விசாரித்தபோது சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க.வின் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளராக இருக்கும் ரஞ்சனா நாச்சியார் என்பது தெரியவந்தது.
கைது
இவர் ரஜினி நடித்த அண்ணாத்த உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் அரசு பேருந்தை வழிமறித்து அரசு ஊழியர்களை அவதூறாக பேசியதாக சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அளித்த புகாரின் பேரில் இன்று காலை மாங்காடு போலீசார் ரஞ்சனா நாச்சியாரை கைது செய்து அழைத்து சென்றனர்.
ரஞ்சனா நாச்சியார் மீது அரசு பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் ரஞ்சனா நாச்சியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
நிபந்தனை ஜாமீன்
இந்த நிலையில் நடிகை ரஞ்சனா நாச்சியாரை மாங்காடு போலீசார் ஸ்ரீபெரும்புதூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1-ல் நீதிபதி ராம்குமார் முன்பு ஆஜர்படுத்தினர்.
ரஞ்சனா தரப்பு வழக்கறிஞர் ஜாமீன் கேட்டு முன் வைத்த நிலையில் மாணவர்களின் உயிர் மேல் உள்ள அக்கறையிலே பேருந்தை நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளார். உயிர் சேதத்தை தவிர்க்கவே தாய் போன்று வாக்குவாதம் செய்துள்ளார். பொது சேவையின் அடிப்படையிலே அந்த நடவடிக்கையில் ஈடுபட்டார். ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் குற்றங்களை மறைக்கவும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, என வாதிட்டனர்.
போலீசார் வீடியோ ஆதாரத்தை நீதிபதியிடம் வழங்கினர்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ராம்குமார் மாங்காடு காவல் நிலைய ஆய்வாளரிடம் ரஞ்சனா மீது ஏதேனும் வழக்கு உள்ளதா? என கேள்வி எழுப்பினார் அதற்கு காவல் ஆய்வாளர் இல்லை என்று தெரிவிக்கவே ரஞ்சனாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும், 40 நாட்கள் மாங்காடு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
பேட்டி
அதனைத்தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த ரஞ்சனா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
பெண்களுக்கு தனி பேருந்து இயக்குவது போல் மாணவர்களுக்கு என தனி பேருந்து இயக்க வேண்டும். இது எனக்கான வெற்றி அல்ல தாய்மார்களுக்கான வெற்றி, என தெரிவித்தார்

.jpg)

No comments
Thank you for your comments