3,008 பேருக்கு இலவச மனைப் பட்டா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்
காஞ்சிபுரம், நவ.28-
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடைபெற்ற விழாவில் 3008 பயனாளிகளுக்கு ரூ.56.45 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கினார்.
விழா
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் அமைந்துள்ள சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கருணாநிதி நூற்றாண்டு தினத்தைக் கொண்டாடும் விதமாக 3008 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தார். எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு,க.செல்வம்,எம்.எல்.ஏ.க்கள் கு.செல்வப் பெருந்தகை, இ.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று 3008 பயனாளிகளுக்கு ரூ.56.45 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப் பட்டாக்களை வழங்கினார்கள்.
விழாவில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது,
கோப்புகள் கண்டெடுக்கப்பட்டு
பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு ஒரு முறை வரன் செய்யும் திட்டத்தின் கீழ் வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் சில கிராமக் கணக்குகளில் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ளதைக் கண்டறிந்து உரிய திருத்தங்கள் செய்தும் பட்டா வழங்கியிருக்கிறோம.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 வட்டாரங்களிலும் பல்வேறு அரசுப் புறம்போக்கு நிலங்களில் குடியிருந்த 5288 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட கோப்புகள் கண்டெடுக்கப்பட்டு அவற்றிற்கு உரிய திருத்தங்களும் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது முதற்கட்டமாக ஸ்ரீபெரும்புதூர்,குன்றத்தூர் வட்டாரங்களை சேர்ந்த 74 கிராமங்களில் வசிக்கும் 2049 பேருக்கு ரூ.41.44 கோடி மதிப்பிலும் பட்டாக்கள் வழங்கியிருப்பது உட்பட மொத்தம் 3008 பயனாளிகளுக்கு ரூ.56.45 கோடி மதிப்பில் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், கோட்டாட்சியர்கள் எஸ்.ரம்யா,சரவணக்கண்ணன்,ஒன்றியக் குழுவின் தலைவர்கள் சரஸ்வதி மனோகரன், எஸ்.டி.கருணாநிதி,நகர்மன்ற தலைவர்கள் சத்தியமூர்த்தி,சுமதி முருகன் ஆகியோர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விழாவில் பயனாளிக்கு வீட்டு மனைப் பட்டாவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழங்கியபோது எடுத்தபடம். அருகில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் பலர் உள்ளனர்.
No comments
Thank you for your comments