Breaking News

காஞ்சிபுரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து - உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்

காஞ்சிபுரத்திலிருந்து வையாவூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் தடம் புரண்டதில் ரயில் தண்டவாளத்தை பெயர்த்து விபத்துக்குள்ளாகி நின்ற சரக்கு ரயில்,


காஞ்சிபுரம், அக்.3:

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் வையாவூர் செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் செவ்வாய்க்கிழமை சரக்கு ரயில் தடம் புரண்டது.இச்சம்பவத்தில் அதிஷ்டவசமாக வாகன ஓட்டிகள் இருவரும், ரயிலின் நடத்துநரும் தப்பி ஓடி உயிர் பிழைத்துள்ளனர்.


காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பழைய ரயில் நிலையம் உள்ளது. தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாவட்டமாக காஞ்சிபுரம் இருந்து வருவதால் இங்கு வெளிமாநிலங்களிலிருந்து பல்வேறு தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள்,இரும்புக் கம்பிகள் ஆகியன கொண்டு வரப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

கர்நாடக மாநிலம் பெல்லாரியிலிருந்து 59 பெட்டிகளுடன் சரக்கு ரயில் ஒன்று இரும்புக் கம்பிகளை ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி வந்து அதை பழைய ரயில் நிலையப் பகுதியில் ஓட்டுநர் நிலை நிறுத்த முயன்று பின்னோக்கி வந்தார்.


அப்போது சிக்னல் கோளாறு காரணமாக ஓட்டுநருக்கும், நடத்துநருக்கும் இடையே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பின்னோக்கி வந்து கொண்டிருந்த ரயில் தடுப்புக்கல்லில் மோதி சாலைக்கு வந்தது.



வையாவூர் சாலையில் உள்ள ரயில்வே கேட் வழியாக வந்து கொண்டிருந்த வாகன ஓட்டிகள் ரயில் வருவதைப் பார்த்ததும் இருசக்கர வாகனத்தைப் போட்டு விட்டு ஓடி உயிர் தப்பினர். இருவரது இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. 

ரயிலின் பின்புறம் இருந்த நடத்துநர் ரயில் தடுப்புக்கல் அல்லது மரத்தில் மோதிவிடும் என உணர்ந்து நடத்துநரும் ரயிலில் இருந்து குதித்து உயிர் தப்பித்தார்.

இச்சம்பவத்தையடுத்து வையாவூர் சாலையில் ரயில்வே கேட் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இது குறித்து ரயில்வே பொறியாளர் சிரஞ்சீவி என்பவர் கூறுகையில் சரக்கு ரயிலை நிலைநிறுத்த பின்னோக்கி வந்து கொண்டிருந்த போது சிக்னல் கோளாறு காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.3 மணி நேரத்தில் தண்டவாளம் சரி செய்து விடுவோம் என்றார்.


No comments

Thank you for your comments