மத்திய மந்திரிகள் அமித்ஷா- நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு
டெல்லி
மத்திய மந்திரிகள் அமித்ஷா- நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை சந்திப்பு
புதுடெல்லி, அக்.3-
பா.ஜ.க. உடனான கூட்டணியை அ.தி.மு.க. முறித்துக் கொண்ட நிலையில், டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
கூட்டணி முறிவு
தேசிய அளவில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. இடம் பெற்றிருந்தது; தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றிருந்தது.
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கூட்டணி கட்சி என்றும் பார்க்காமல் அ.தி.மு.க.வின் தலைவர்களை சரமாரியாக விமர்சித்தார்.
நிலைப்பாட்டில் உறுதி
பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அ.தி.மு.க. அறிவித்தது. வரும் 2024 மற்றும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என அ.தி.மு.க. அறிவித்தது. அ.தி.மு.க.வை மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சிகள் நடப்பதாகவும் இதற்கு அ.தி.மு.க. பிடி கொடுக்க மறுப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் அ.தி.மு.க. உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் மேல் மட்ட தலைவர்கள் கூறி வருகிறார்கள். பா.ஜ.க.வோ ,அ.தி.மு.க. கூட்டணியை முறித்துக் கொண்டது தொடர்பாக கட்சி மேலிடம் கருத்து தெரிவிக்கும் எனக் கூறி இந்த விவகாரத்தில் அதிகம் பேசாமல் மவுனம் காக்கிறது.
அண்ணாமலை பயணம்
இந்தநிலையில் டெல்லி பா.ஜ.க. தலைமை அண்ணாமலையை புறப்பட்டு வரச் சொன்னது. டெல்லி சென்ற அண்ணாமலை நேற்று முன்தினம் இரவு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை முதலில் சந்தித்துள்ளார்.
ஜே.பி.நட்டாவுடன் ஆலோசனை மேற்கொண்ட அண்ணாமலை, இரவு 10.30 மணியளவில் மூத்த தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிந்துள்ள நிலையில், தனது பா.ஜ.க.வின் மேலிட தலைவர்களுடனான சந்திப்பின் போது கூட்டணி விவகாரம் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்து இருக்கலாம் எனத் தெரிகிறது.
நிர்மலா சீதாராமன்
நேற்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை டெல்லியில் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.
டெல்லி செல்லும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணமாலை, தமிழக பா.ஜ.க. தலைவர் என்பது வெங்காயம் போன்றது என பரபரப்பாக பேட்டி அளித்தார். மேலும், நடைபயணம் குறித்தும், நடை பயணத்தில் பங்கேற்க இருப்பவர்கள் குறித்தும் ஆலோசிப்பதற்காகவே டெல்லி செல்வதாகவும் கூட்டணி முறிவு குறித்து என்னிடம் எந்த அறிக்கையும் கட்சி மேலிடம் கேட்கவில்லை. இது கார்ப்பரேட் நிறுவனம் அல்ல. அ.தி.மு.க. தலைமையில் புதிய கூட்டணி அமைந்தால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பின்னடைவு எதுவும் ஏற்படாது, என்று கூறினார்.
No comments
Thank you for your comments