காஞ்சிபுரத்தில் பழங்கால பாத்திரங்கள் கண்காட்சி தொடக்க விழா
காஞ்சிபுரம், செப்.16:
காஞ்சிபுரத்தில் அக்ரஹாரம் அமைப்பு சார்பில் காமராஜர் தெருவில் உள்ள கேபிகே திருமண மண்டபத்தில் நடைபெற்ற பழங்காலப் பாத்திரங்கள் கண்காட்சி தொடக்க விழாவிற்கு கீர்த்திவாசன் ஐயர் தலைமை வகித்தார்.
காஞ்சி நகர வரவேற்புக் கமிட்டிதலைவர் டி.கணேஷ், துணைத் தலைவர் பாபு, செயலாளர் சுப்பிரமணியன்,ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் தலைவர் எம்.வி.சௌத்ரி கண்காட்சியை தொடக்கி வைத்து பார்வையிட்டார்.
துணைத் தலைவர் அருண்சுரேஷ்,சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு எஸ்பி சிவக்குமார்,நல்லாசிரியை பத்மாவதி ஆகியோர் பங்கேற்று பழங்காலப் பாத்திரங்களை பயன்படுத்தியதால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மைகள், பழமையை மீட்டுக் கொண்டு வர வேண்டியதன் நோக்கங்கள் குறித்து விரிவாக பேசினார்கள்.
கண்காட்சியில் தமிழர்களின் பாரம்பரியம்,கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பழங்கால பாத்திங்களின் வகைகளான கூஜா, அண்டா, படி, செம்பு, குழந்தைகளுக்கு பாலூட்ட உதவும் கிண்டி ,தூக்குச்சட்டி, குழிப்பணியார தட்டு, இட்லிக்கொப்பரை, பல்லாங்குழி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட பொருட்கள் இடம் பெற்றிருந்தன.
50 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழங்கால நாணயங்கள்,ரூபாய் நோட்டுகள்,கொலு பொம்மைகள், ரசாயணக் கலப்பில்லாமல் தயாரிக்கப்பட்ட விபூதி, மூலிகைப்பொருட்கள் ஆகியன உட்பட பலவும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
தொடக்க விழா நிறைவில் அக்ரஹாரம் அமைப்பின் நிர்வாகி வித்யா வாசன் நன்றி கூறினார்.இந்த இலவசக் கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறுகிறது.

No comments
Thank you for your comments