Breaking News

இயக்கத்தை வளர்த்தவர் ஓபிஎஸ்... தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை - ஜேசிடி பிரபாகர் பேட்டி

காஞ்சிபுரம்,செப்.2:

தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியமே இல்லை என அதிமுக ஒபிஎஸ் அணியின் துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் சனிக்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.



அதிமுக ஒபிஎஸ் அணி சார்பில் காஞ்சிபுரம் அருகே களியனூரில் முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களது புரட்சிப் பயணம் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.இப்பொதுக்கூட்ட மேடை நாடாளுமன்றம் வடிவில் அமைக்கப்பட்டு வருவதையும்,கூட்ட முன்னேற்பாட்டுப் பணிகளையும் கழக துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களிடம் கூறியதாவது - 


அதிமுகவுக்கு சோதனைகள் வந்த போதெல்லாம் கட்சியை தூக்கி நிறுத்தியவர்கள் எம்ஜிஆரும்,ஜெயலலிதாவுமே ஆவர்.அவர்களைத் தொடர்ந்து கட்சிக்கு பல இடையூறுகள் ஏற்பட்ட போதெல்லாம் இயக்கத்தை வளர்த்தவர் ஓபிஎஸ். அவர் தமிழகம் முழுவதும் புரட்சிப் பயணத்தை தொடங்கவுள்ளார். 

இப்பயணம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எடப்பாடி பழனிச்சாமி அணியினர் பயன்படுத்தி வரும் கொடியையோ, சின்னத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் சொல்லவில்லை.கட்சிக் கொடியை,சின்னத்தை பயன்படுத்த எங்களுக்கே உரிமை இருக்கிறது.அதனால் தனிக்கட்சி தொடங்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

ரஜினிகாந்தை ஓபிஎஸ் சந்தித்து பேசியிருப்பது மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இரு தலைவர்களும் பேசிக் கொண்டிருந்ததால் அரசியலும் பேசியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். பேட்டியின் போது ஓபிஎஸ் அணியின் உத்தரமேரூர் தொகுதி பொதுக்குழு உறுப்பினர் ஜெ.காமாட்சி கான் உட்பட நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

 


No comments

Thank you for your comments