‘அங்காடித் தெரு’ நடிகை உடல் நலக்குறைவால் மறைவு
சென்னை:
வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அங்காடித் தெரு’. இப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சிந்து. இது தவிர ’கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் வடிவேலு நடித்த ‘படித்துறை பாண்டி’ கதாபாத்திரத்துக்கு மனைவியாக நடித்திருந்தார். மேலும், சில தொலைகாட்சித் தொடர்களிலும் சிந்து நடித்துள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு சிந்துவுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. நண்பர்கள் அவ்வப்போது செய்த உதவியால் கடந்த மூன்று ஆண்டுகளாக புற்றுநோய் சிகிச்சைக்கு செலவு செய்து வந்துள்ளார்.
அண்மையில் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தனக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார் சிந்து. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். எனினும், பாதிப்பு அதிகரித்ததால் இன்று அதிகாலை 2.15 மணியளவில் சிந்துவின் உயிர் பிரிந்தது.
இந்த தகவலை நகைச்சுவை நடிகர் கொட்டாச்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிந்துவின் மறைவுக்கு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments