கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுக்கு அரசு நிதி உதவி
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளதாவது
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17 முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்படி திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிட்டுள்ளது.
கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம்,
1. தேவாலயங்களில் பீடம் கட்டுதல் (Construction of Pedestal in Churches)
2. கழிவறை வசதி அமைத்தல் (Construction of Toilet facilities)
3. குடிநீர் வசதிகள் உருவாக்குதல் (Creation of Drinking Water facilities)
இத்திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக, தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டிடத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.2 இலட்சமும், 15-20 வருடம் வரை இருப்பின் ரூ.4 இலட்சமும் 20 வருடங்களுக்கு மேல் இருப்பின் ரூ.6 இலட்சம் வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணையதள முகவரியில் www.bcmbcmw@tn.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவத்தை அதிலுள்ள பிற்சேர்க்கை-II & III உள்ளவாறு பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குநருக்கு நிதி உதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும்.
எனவே தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments