Breaking News

டிஐஜி விஜயகுமார் தற்கொலை - முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை: 

கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்திற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை தற்கொலை செய்து கொண்டுள்ளார். காலை நடைபயிற்சி முடித்துவிட்டு முகாம் அலுவலகத்திற்கு வந்த அவர், மெய் பாதுகாவலர் துப்பாக்கியை வாங்கி தற்கொலை செய்துள்ளார். 

கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: 

கோவை சரக காவல்துறை துணைத்தலைவர் விஜயகுமார் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். 

விஜயகுமார் தனது பணிக்காலத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணிப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றி தமிழ்நாடு காவல்துறைக்குப் பெருமை சேர்த்தவர். 

அவருடைய இந்த மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தாருக்கும் காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: 

கோவை சரக டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதியரசர் சி.டி. செல்வம் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை என்ன ஆனது? காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழக காவல்துறையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவரின் தற்கொலை என்பது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இந்த தற்கொலைக்கு பின்னணி என்ன என்று, தமிழக அரசு, தீவிர விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: 

கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக பணியாற்றி வந்த விஜயகுமார் இன்று காலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விஜயகுமார் திறமையான காவல்துறை அதிகாரி. மிகவும் நேர்மையானவர். காவல்பணியை நேசித்தவர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை துணை கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்த அவர், பின்னர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குடிமைப் பணி தேர்வுகளை தமிழில் எழுதி இ.கா.ப அதிகாரி ஆனவர். விஜயகுமாரின் சிறப்பான பணியைக் கண்டு, அவரை முன்மாதிரியாக ஏற்றுக்கொண்ட இளைஞர்கள் ஏராளமாக உள்ளனர்.

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விஜயகுமார் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை. அவரது மன அழுத்தத்திற்கான காரணம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். பொதுவாகவே காவல் பணி என்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது தான். காவல் அதிகாரிகள் மன அழுத்தத்தை வென்றெடுக்க வேண்டுமே தவிர, அதற்கு இரையாகி விடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.


மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: 

தமிழக காவல்துறையில், கோயம்புத்தூர் சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டு மாண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. படித்துப் பட்டம் பெற்று, காவல்துறையில் உயர் பதவிக்கு வந்த விஜயகுமார் எத்தகைய மன அழுத்தத்திற்கு ஆளானார் என்பதை யூகிக்க முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் என்னுடைய கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: 

கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயக்குமார் ஐ.பி.எஸ் தற்கொலை செய்து கொண்ட செய்தி வேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது. 2009ம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக திறம்பட பணியாற்றி வந்தவர் விஜயகுமார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், சக காவல்துறை அதிகாரிகளுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்.

விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உரிய விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் நிலையில் பிரச்னைகளுக்கு தற்கொலை ஒன்றே தீர்வு அல்ல என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும். அதே நேரத்தில் காவல்துறையில் நிலவும் பணி சுமையை குறைக்கவும், காவல்துறையினருக்கு உரிய ஓய்வு அளிக்கவும், குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை காவல்துறையினருக்கு உரிய உடல், மன நல ஆலோசனைகள் வழங்கவும் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த தருணத்தில் வலியுறுத்துகின்றேன்.

No comments

Thank you for your comments