Breaking News

செய்தியாளர்களை மிரட்டிய என்டிசி லாஜிஸ்டிக்ஸ் - நேஜயூ தலைவர் Dr கா.குமார் கடும் கண்டனம்

காற்றாலைகள் ஏற்றி சென்ற என்டிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மூன்று மல்டி ஆக்ஸல் டெலிஸ்கோப்பிக் டிரைலர், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் பிள்ளைச்சத்திரம் சாலையோரம் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  

இதுகுறித்து  அங்கு செய்தி சேகரிக்க சென்ற  முன்னணி தொலைக்காட்சியின் செய்தியாளர் ஒருவரை  என்டிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள்  செய்தியாளரின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு அவர் எடுத்த அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்து விட்டு அவரை மடக்கி உட்கார வைத்து மிரட்டல் விடுத்தனர்.  

இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், செய்தியாளர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையும் அச்சுறுத்தலும் தொடர்கதையாக உள்ளது என்று தனது வேதனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார்  வெளியிட்டுள்ள  தனது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளை சத்திரம் அருகே சர்வீஸ் சாலையில்  என்.டி.சி.குரூப் ஆப் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் மல்டி ஆக்ஸல் டெலிஸ்கோப்பிக் டிரைலர் காற்றாலைகள் இறக்கைகளுடன் நிறுத்தப்பட்டிருந்தது.

பிள்ளை சத்திரம் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் சர்வீஸ் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மல்டி ஆக்ஸல் டெலிஸ்கோப்பிக் டிரைலர் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் காற்றாலை இறக்கைகளுடன் சுமார் 20 அடி பள்ளத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று மல்டி ஆக்ஸல் டெலிஸ்கோப்பிக் டிரைலர்கள் ஏரியில் சாய்ந்தது.

அதிக எடையுள்ள இந்த காற்றாலைகள் சரிந்து அதன் மீது வாகனம் கவிழ்ந்ததால் காற்றாலைகளில் அதிக சேதம் ஏற்பட்டது. இதை மூடி மறைத்து சரி கட்ட அந்த நிறுவனத்தின்  அதிகாரிகள் - ஊழியர்கள் முயற்சித்தனர்.

தகவல் அறிந்து செய்தி சேகரிக்க செய்திதுறையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்றனர். அப்போது, செய்தி வீடியோ எடுத்துக் கொண்டிருந்த முன்னணி தொலைக்காட்சியின் செய்தியாளரை என்டிசி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களும், காற்றாலை உற்பத்தி செய்த நிறுவனத்தின் அதிகாரிகளும் செய்தியாளரின் செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டு அவர் எடுத்த அனைத்து வீடியோக்களையும் டெலிட் செய்து விட்டு அவரை மடக்கி உட்கார வைத்து மிரட்டல் விடுத்தனர். 

இதைக் கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு சக செய்தியாளர்கள் சென்றபோது அவர்களையும் மிரட்டும் தொணியில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அச்சுறுத்தினர். 

செய்தியாளரை மிரட்டி, அவரது உடைமைகளை பறித்தது  அதிகார வர்கத்தின் அத்துமீறல்... செய்தியாளர்களை மிரட்டும் இந்த செயல் சமூகத்தின் அவலநிலையையே காட்டுகின்றன. இது ஜனநாயகத்தின் படுகொலை...

ஜனநாயகத்தின் நான்காவது தூண் இன்று பல்வேறு தடைகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.  அதன் விளைவு ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை துறை தனது சுதந்திரத்துக்காகப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதிகார வர்க்கத்தின் பழிவாங்கும் உணர்ச்சி காரணமாகவும், மதவாத சக்திகளாலும் பத்திரியாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அரசியல் மற்றும் மதவாத சக்திகள் இந்திய பத்திரிகையாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறார்கள்.

பத்திரிகை சுதந்திரம்தான் வரலாற்றில் புரட்சியை பதிவு செய்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரம்தான் உலகப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. பத்திரிகை சுதந்திரம்தான் மக்களின் ஜனநாயகத்தை மீட்டெடுக்கிறது. எனவே உண்மையான ஜனநாயகம் தழைக்க பத்திரிகை சுதந்திரத்தைக் காக்கவேண்டும்.

நேரம் காலம் பாராமால் அயராது உழைக்கும் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகம் சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் செயல்பட்டால்தான் மக்களுக்கு உண்மைகள் சென்று சேரும்.  

தமிழக அரசு செய்தியாளர்களை தாக்குபவர்கள் மீது உரிய வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதற்கு உரிய தீர்வு கிடைக்கும். 

அதிகார வர்கத்தினருக்கு சாதகமாக  சமாதனம் செய்து வைப்பது நிரந்தர தீர்வாகாது. இவ்வாறு செய்வதால் இதுபோன்ற செயல்கள் தொடர்கதையாக  நீளும்... அதிகார வர்கத்தினர் என்றும் செய்திதுறையினருக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும்.

எனவே உடைமைகளை பறித்து செய்தி வீடியோவை அழித்ததற்காக உரிய வழக்கு பதியவேண்டும். செய்தி சுதந்தரத்தை காக்கவேண்டும் என்று  நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் Dr கா.குமார் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

மேலும், விபத்து செய்திதானே எதற்காக செய்தியாளர்களை மிரட்டவேண்டும் என்ற கேள்வியை முன்வைத்துள்ளார். இதுகுறித்து விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து காவல்துறையினர் போக்குவரத்து துறையினரும் விசாரனை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 



No comments

Thank you for your comments