பொது விநியோகத் திட்ட ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி கூட்டம்
உணவு பாதுகாப்பு துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் பொது விநியோகத் திட்ட ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி கூட்டம் நடைபெற்றது..
காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை கீழ் பொது விநியோகத் திட்டத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி, பொருட்கள் பாதுகாப்பு குறித்த பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அனுராதா மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து தாலுகாக்களில் பணிபுரியும் சுமார் 273 பொது விநியோகத் திட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு உணவு பொருட்கள் பாதுகாப்பு குறித்த நடைமுறை பயிற்சிகளை பயிற்சியாளர் மீனலோஷனி எடுத்துரைத்தார்.
இப் பயிற்சியில் பொது விநியோகத் திட்ட கடையினை சுத்தமாக வைத்திருத்தல் , உணவுப் பொருட்களின் ஈரப்பதம் இன்றி பாதுகாத்தல், விற்பனைக் கடையினை சுத்தமாக வைத்திருத்தல் மற்றும் உணவு பொருட்கள் வருகையை சரியாக பதிவு செய்து அதன்படி பொருட்களை வழங்குதல், பொருட்களில் பூச்சிகள் இல்லாமல் பொருட்களை பாதுகாத்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை பொதுமக்கள் சேவையுடன் வழங்குவேன் என்ற பதாகையில் அனைத்து ஊழியர்களும் கையெழுத்திட்டு உறுதிமொழி ஏற்றனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து ஊழியர்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் கலப்பட பொருட்களை எவ்வாறு கண்டுபிடித்தல் என்பது குறித்த கையேடு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் மணி , கண்காணிப்பாளர் சத்திய நாராயணன் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர் .



No comments
Thank you for your comments