Breaking News

நாளுக்குநாள் பெருகும் கொரோனா தொற்று.. பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயம்.. மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு

சென்னை: 

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 


கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பானது பின்னாட்களில் உலகம் முழுவதும் பரவி கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. தற்போது வரை இந்த தொற்று பாதிப்பு காரணமாக சுமார் 68 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். 68 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்தியாவை பொறுத்த அளவில் இதுவரை 5.3 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். 4 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் முதல் ஜூலை வரை உச்சத்திலிருந்த கொரோனா பாதிப்பானது தடுப்பூசி வந்த பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது. 

இருப்பினும் அதே ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை மீண்டும் தொற்று பாதிப்பு உச்சம் தொட்டது. முதல் அலையை தடுப்பூசி கண்ட்ரோல் செய்திருந்தாலும், இரண்டாவது அலையை தடுப்பூசியால் பெரிதும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் முதல் அலையில் மக்கள் பெற்ற நோய் எதிர்ப்பு திறன் காரணமாக இரண்டாவது அலையில் பெரிய உயிர் சேதம் ஏற்படவில்லை. வைரஸும் அவ்வளவு வீரியமாக இருக்கவில்லை.

இந்நிலையில் தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் உருமாறி தாக்க தொடங்கியுள்ளது.  சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் XXB வகை வைரஸ் பரவியது. இந்தியாவில் எந்த வைரஸும் பரவவில்லை. 

இப்படி இருக்கையில், தற்போது சில நாட்களுக்கு முன்னர் XXB.1.16 வகை கொரோனா தொற்று இந்தியாவையும் தாக்க தொடங்கியுள்ளது. இது இதற்கு முந்தைய வைரஸ் பாதிப்புகளை விட வேகமாக பரவக்கூடியது என்பதால் தற்போது புதிய பீதி கிளம்பியிருக்கிறது. ஆனால் இந்த வைரஸை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று கூறியுள்ளனர்.

ஏனெனில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் இயல்பாகவே நோயெதிர்ப்பு திறன் மக்களுக்கு இருக்கிறது என்றும் மட்டுமல்லாது இந்த XXB.1.16 உருமாறிய கொரோனா வைரஸ் வீரியமானது இல்லை என்றும் சொல்லப்படுகிறது. 

கொரோனா வைரஸை உற்று பார்த்தால் நத்தையின் உணர் கொம்புகளை போல இந்த வைரஸை சுற்றி பல குச்சிகள் இருக்கும். இதை ஸ்பைக் புரதம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த ஸ்பைக் புரதம்தான் மாற்றமடைந்து புதிய வேரியண்ட்டாக பரினமிக்கிறது. இப்படியதான் கோவிட் 19லிருந்து ஒமிக்ரான், பின்னர் அங்கிருந்து தற்போது XXB.1.16 என வைரஸ் வளர்ந்திருக்கிறது.

எனவே இந்தியாவில் இது வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் 3036 பேர் புதியதாக இந்த வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல நேற்று மட்டும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,30,901 ஆக உயர்ந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். 

எனவே தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநில சுகாதார செயலாளர்களுடன் மத்திய சுகாதார அமைச்சகம் அவ்வப்போது கலந்துரையாடி நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க சில அட்வைஸ்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த அனைத்து மருத்துவமனைகளிலும் மாஸ்க் கட்டாயம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

மருத்துவர்கள் மட்டுமல்லாது, நோயளிகள், உறவினர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து மருத்துவமனைகள் மட்டுமல்லாது அனைத்து பொது இடங்களிலும் மாஸ்க் கட்டாயமாக அணிய வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். 

கொரோனா தொற்றை பொறுத்த அளவில் தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி புதியதாக 198 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கையானது 1086ஆக உயர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments