அரசு பள்ளியில் +2 தேர்வு முடிந்ததும் வகுப்பறைகளில் பொருட்களை உடைத்து நொறுக்கிய மாணவர்கள்
மணப்பாறை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 10-ந்தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வுகள் நேற்றுடன் நிறைவு பெற்றது.
தேர்வுகள் முடிந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர். இதில் சிலர் பேனா மையை தெளித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தானத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் 140 மாணவர்கள் உள்பட சுமார் 320 பேர் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதினர்.
நேற்று தேர்வு முடிந்ததும் மாணவர்கள் சிலர் 25 வகுப்பறை கட்டிடங்களில் சுமார் 17 வகுப்பறைகளை சூறையாடினர். அப்போது அந்த கட்டிடங்களில் இருந்த மின் விசிறிகள், மின் விளக்குகள், கதவு, மேஜை, நாற்காலி என பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த புத்தானத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் இது தொடர்பாக தேர்வு மைய கண்காணிப்பாளர் புத்தானத்தம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் 4 மாணவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் இந்த செயல் மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

No comments
Thank you for your comments