“உங்கள் கருத்துகளை கவனத்தில் கொள்கிறோம்” - நடிகர் கார்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் பதில்
சென்னை:
"உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம். உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம்" என்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை பாராட்டி நடிகர் கார்த்தி எழுதிய கடிதத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில்,
"அன்பின் கார்த்தி சிவகுமார், உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்.உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்'" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகர் கார்த்தி உழவன் பஃவுண்டேசன் சார்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேளாண்மைக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகத் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருவதற்கு எங்களுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நேற்றைய வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.அதில் நம் மாணவர்கள் உழவு பற்றியும் உழவர்களின் நிலைப் பற்றியும் அறிந்து கொள்ள வேளாண் சுற்றுலா, சிறு குறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்க நிதி ஒதுக்கீடு, நீர் நிலைகள் சீரமைப்பு , மரபு விதைகள் பரவலாக்கம், அதிக அளவு சிறுதானியங்களை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு விருதுகள் போன்ற பல அறிவிப்புகள் இக்காலகட்டத்திற்கு அவசியமானது. இதுபோன்று உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி.
அதோடு சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அவசியமான முன்னெடுப்பு. தற்போது சாமை, வரகு, குதிரைவாலி போன்றவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவற்றை அரிசியாகப் பிரித்தெடுக்க போதுமான அளவுக்கு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் சரி செய்யத் தேவையான நிபுணத்துவம் பெற்றவர்களும் மிகக் குறைவாக உள்ளனர் என்பது இத்தளத்தில் இயங்குவதன் மூலம் எங்களுக்குத் தெரிய வருகிறது. இதனையும் அரசு கவனத்தில் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதோடு மட்டுமன்றி சிறு, குறு உழவர்களுக்கு அளிக்கப்படும் வேளாண் கருவிகள் அந்தந்த நில அமைப்புக்கு ஏற்றவாறும், அவர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையிலும் இருக்க வேண்டியது மிக அவசியமானதாக உள்ளது.இதுப்போன்ற குறிப்புகளையும் அரசின் திட்டமிடலில் இணைத்துக் கொண்டால், அரசு மேற்கொள்ளும் வேளாண் நலத்திட்டங்கள் இன்னும் பெருவாரியான உழவர்களுக்கும் பொது மக்களுக்கும் பயனளிக்கும் என நம்புகிறோம்" என்று அவர் கூறியிருந்தார்.
அன்பின் @Karthi_Offl, உழவர் நலன் காக்கச் செயலாற்றும் உங்களைப் போன்றவர்களின் பாராட்டுகளே எங்களுக்கு ஊக்கம்!
— M.K.Stalin (@mkstalin) March 22, 2023
உங்கள் கருத்துகளைக் கவனத்தில் கொண்டிருக்கிறோம்.
பாராட்டுக்கு நன்றி எனச் 'சொல்ல மாட்டேன்'; இன்னும் பல திட்டங்கள் தீட்டி உழவர் முகத்தில் மகிழ்ச்சி காண 'செயலாற்றுவோம்'! https://t.co/9uusQyBWpz
வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் @mkstalin அவர்களுக்கும் மற்றும் அமைச்சர் @MRKPanneer அவர்களுக்கும் நன்றி.
— Karthi (@Karthi_Offl) March 22, 2023
அறிவித்துள்ள திட்டங்களில் தங்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை உழவர்கள் முழுமையாய் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். #TNFarmersBudget2023 pic.twitter.com/4FmSNETj7e

No comments
Thank you for your comments