காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிக்கு அரசு ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு-அறங்காவலர் குழுவின் தலைவர் தகவல்
காஞ்சிபுரம், மார்ச் 23:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருப்பணிக்கு தமிழக அரசு ரூ.17 கோடி நிதி ஒதுக்கியிருப்பதாக அக்கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மரத்தேர் மண்டபத்துக்கு சுவாமியை எழுந்தருளச் செய்யும் தேர் மண்டபம், ஆலய வளாகத்திற்குள் புதியதாக அமைக்கப்பட்டு வரும் நூலகம்,திருவிழாவிற்காக பந்தல் அமைக்கும் பணிகள் ஆகியனவற்றை அறங்காவலர் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அறங்காவலர் குழுவின் தலைவர் எம்.வி.எம்.வேல் மோகன் கூறியதாவது..
தமிழகத்தில் உள்ள பெரிய சிவாலயங்களில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலும் ஒன்றாகும்.பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாகவும் இருந்து வருகிறது.இக்கோயில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணத் திருவிழா நிகழ் மாதம் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வரும் 31 ஆம் தேதி 63 நாயன்மார்கள் திருக்கூட்ட ஊர்வலம் காலையிலும்,வெள்ளித் தேரோட்டம் மாலையிலும் நடைபெறுகிறது.மறுநாள் ஏப்ரல் முதல் தேதி திருவேகம்பம் சிவலாய அறக்கட்டளை சார்பில் மகாரதம் என்னும் தேரோட்டமும் நடைபெறுகிறது.நெடுஞ்சாலைத்துறையினரின் உதவியுடன் தேரோடும் ராஜவீதிகள் முழுவதும் சீரமைக்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி அதிகாலையில் ஏலவார் குழலி அம்மைக்கும்,ஏகாம்பரநாதருக்கும் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர்,கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம்.
அரசு அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பு தருவதாக சொல்லியிருக்கின்றனர். காஞ்சிபுரத்தில் நடக்கும் திருவிழாக்களிலேயே மிகவும் பெரிய திருவிழாவாக இருப்பதால் பக்தர்கள் நலனுக்காக ஆலய வளாகத்திற்குள் மருத்துவ முகாம்களும் நடத்தப்படும்.சுழற்சி முறையில் போலீஸôர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.தெருக்களில் சேரும் குப்பைகளை மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக உடனுக்குடன் அகற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திருக்கோயிலின் அறங்காவலர்களாக புதிதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ளோம். எனவே பொதுமக்களும்,சிவனடியார்களும் திருவிழாவை சிறப்பாக நடத்த போதுமான ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். கோயில் திருப்பணியை தொடங்க தமிழக அரசு ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திருவிழா நிறைவு பெற்றவுடன் கோயில் திருப்பணிகளை தொடங்கிடவும் ஆலோசித்து வருவதாகவும எம்.வி.எம்.வேல்மோகன் தெரிவித்தார். பேட்டியின் போது குழு உறுப்பினர்கள் வ.ஜெகன்னாதன், சு.விஜயகுமார்,சு.வரதன்,கோயில் செயல் அலுவலர் ப.முத்து லட்சுமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

No comments
Thank you for your comments