Breaking News

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கியது

 ஈரோடு :

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க. நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். 



இந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்காளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. இந்த பணி 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி 19-02-2023ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. இதற்காக 238 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சரி பார்த்து பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். 

வாக்காளர்கள் தகவல் சீட்டில் வாக்காளர்கள் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர், இடம் பெற்றுள்ள பாகத்தின் பெயர், பாகம் எண் வரிசையில் வாக்குச்சாவடியின் பெயர் தேர்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. 

இந்த வாக்காளர் தகவல் சீட்டை மட்டும் வைத்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க இயலாது. இந்திய தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை கொண்டு வந்து வாக்களிக்கலாம் என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் 18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களிடம் அளித்து அதற்குரிய ஒப்புகையை பெற்றனர். 

இதுகுறித்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு இன்று  முதல் வருகின்ற 24ம் தேதி வரை 'பூத் சிலிப்' வழங்கப்படவுள்ளது. இதற்காக ஒரு வாக்குச்சாவடிக்கு ஒருவர் எனும் கணக்கில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகளுக்கும் 238 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பூத் சிலிப் படிவங்கள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டன. 

அலுவலர்கள் இன்று  காலை 8 மணி முதல் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்த்து பூத் சிலிப் வழங்குகின்றனர். பூத் சிலிப் பெற முடியாத அல்லது கிடைக்கப்பெறாத வாக்காளர்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று அந்தந்த வாக்கு சாவடிகளிலேயே பூத் சிலிப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


 

No comments

Thank you for your comments