Breaking News

பிரபல இயக்குனரும் நடிகருமான டி.பி.கஜேந்திரன் காலமானார்... சோகத்தில் திரையுலகம்..!

பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன்(வயது 68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப். 5) உயிரிழந்தார்.  


இவர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நேற்று (பிப். 4) வீடு திரும்பிய நிலையில், இன்று காலமானார். 

இவர் விசு, மோகன் காந்திராமன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

1988இல் 'வீடு மனைவி மக்கள்' என்ற படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். இவர், சீனா தானா, பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நகைச்சுவை படங்களை இயக்கியவர்.

இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரைப் பதித்தவர் டி.பி.கஜேந்திரன். 1985ஆம் ஆண்டு வெளியான சிதம்பர ரகசியம் படத்தில் இவர் நடிகராக அறிமுகமானார். 

நேற்று பாடகி வாணி ஜெயராம் உயிரிழந்த நிலையில், இன்று இயக்குநர் டி.பி.கஜேந்திரன் காலமானது தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், பிரபல இயக்குநர் டி.பி.கஜேந்திரன் மறைவுக்கு அவரது நெருங்கிய நண்பரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

“பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், டி.பி.கஜேந்திரன் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன். தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. 

திரு. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments