Breaking News

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பைவிட 17 மடங்கு அதிகம்! - ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்...

வாராணசி :

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வ அறிவிப்பைவிட 17 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாராணசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் தலைமையில் நடைபெற்ற ஆய்வில், 

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பதிவு செய்யப்படாத அல்லது அறிகுறியற்ற எண்ணிக்கையானது, அதிகாரப்பூர்வ எண்ணிக்கையான 4.5 கோடியைவிட 17 மடங்கு அதிகமாக இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.

அறிவியல் கழகத்தின் விலங்கியல் துறை பேராசிரியர் ஞானேஷ்வர் சௌபே தலைமையில், நாட்டின் 34 ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த 88 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் அறிக்கை புகழ்பெற்ற அறிவியல் இதழான 'இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷியஸ் டிசீஸ்’-இல் வெளியாகியுள்ளது.

இந்த விஞ்ஞானிகள் குழு, கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நாட்டின் 6 மாநிலங்களில் 15 மாவட்டங்களை சேர்ந்த 2,301 நபர்களிடம் ஆண்டிபாடி பரிசோதனை செய்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் சௌபே கூறுகையில்,

இந்த ஆய்வின் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்திய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் கொரோனா நோய்த் தொற்றின் அறிகுறியற்றவர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக 26 முதல் 35 வயதுடைய பெரும்பாலானோர் அறிகுறி இல்லாமல் உள்ளனர்.

கொரோனா அலைக்கு பிறகு மக்களுக்கு நடத்தப்படும் ஆண்டிபாடி சோதனையானது உண்மையான தொற்றுநோயை துல்லியமாக மதிப்பிடும் என்று விஞ்ஞானிகள் பரிந்துரைத்துள்ளனர்.

எனவே, அதே செயல்முறையை பின்பற்றி, 14 மாவட்டங்களில் நகர்ப்புறத்தில் வசிக்கும் குறிப்பாக சாலையோர வியாபாரிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. முக்கியமாக இந்த சோதனையானது கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனக் கூறிய நபர்களிடம் நடத்தப்பட்டது.

இதில், ஆன்டிபாடி-நேர்மறை நபர்களின் குறைந்தபட்ச சதவிகிதம் சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டத்தில் (2%) காணப்பட்டது. அதேபோல் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தின் காஜிப்பூர் மாவட்டத்தில் 47 சதவிகிதம் கண்டறியப்பட்டது.

இந்த ஆய்வில், நோய்த் தொற்றின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைக்கும், பாதிப்புக்கு சாத்தியமான எண்ணிக்கைக்கும் இடையிலான வேறுபாடு அறிகுறி இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம் என்றார்.

No comments

Thank you for your comments