Breaking News

பல்வேறு திட்ட பணிகளை கண்காணிப்பு அலுவலர் இல.சுப்பிரமணியன், ஆட்சியர் ஆர்த்தி நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு  திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.


இன்று (19.01.2023) காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் மற்றும்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் காஞ்சிபுரம் மாநகராட்சிகுட்பட்ட செவிலிமேடு அரசு தொடக்கப்பள்ளியில் செயல்படுத்திவரும் முதலமைச்சர்  காலை உணவு திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவினை சாப்பிட்டு, உணவின் தரத்தினை பரிசோதித்து, மாணவ/ மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர். 

அப்பள்ளியிலுள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு, அங்கு குழந்தைகளுக்கு சமைக்கப்படும் உணவின் தரத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

பின்பு வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் 4.32 கோடி மதிப்பில் இருளர் இன பழங்குடியின மக்களுக்காக கட்டப்படும் 100 குடியிருப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.  சிங்காடிவாக்கம் மேட்டுத்தெருவில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நோயால் பாதிக்கப்பட்ட இரவி என்பவர் வீட்டிற்கு சென்று அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர். 

மேலும் சிங்காடிவாக்கத்தில் அடர்வு முறையில் மாகன்று நடவு செய்தல் முறையை கேட்டறிந்து, அதற்கு 75% மானியத்தில் வழங்கப்பட்டுள்ள  சொட்டுநீர் பாசனம் முறையை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். மேலும் மருதம் ஊராட்சியில் ஆர்கானிக் முறையில் பராமரிக்கப்படும் எலுமிச்சை நடவு பண்ணையை பார்வையிட்டார்கள்.

இதனை தொடர்ந்து, புத்தகரம் ஊராட்சியில் 5.91 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பள்ளி கழிவறை கட்டிடத்தையும், 29.40 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற கட்டிடத்தையும், தோட்டக்கலை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையையும், மருதம் ஊராட்சியில் 4.15 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலைகளையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.

இவ் ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) திருமதி.க.கவிதா, வேளாண் இணை இயக்குநர் திரு.இளங்கோவன், வேளாண் துணை இயக்குநர் திரு.கணேசன்,  துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்)  மரு. பிரியாராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.முத்துசுந்தரம் மற்றும் திரு.இராஜ்குமார் மற்றும் அரசு அலுவலகள் கலந்துக்கொண்டனர்.                                                                                                               

செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்

No comments

Thank you for your comments