Breaking News

கழிப்பறை வசதியில்லாத அங்கன்வாடி மையங்கள்

கோவை :

கோவை மாவட்டத்தில் கழிப்பறை வசதியில்லாத அங்கன்வாடி மையங்களால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


கோவை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 1 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்கப்படும் கல்வி, வழங்கப்படும் உணவுகள் அனைத்தும் மேம்பட்டிருக்கின்றன. 

ஆனால், அடிப்படை கட்டமைப்புகளான முறையான கட்டட வசதி, குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பல அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.


மாநகராட்சிப் பகுதியில் மட்டும் 162 அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை வசதியில்லை என்று அண்மையில் நடைபெற்ற சுகாதாரப் பேரவை கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்  தெரிவித்தார்.

அதேபோல, ஊரகப் பகுதிகளிலும் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் கழிப்பறை வசதியில்லாத நிலை காணப்படுகிறது. இதனால், பெற்றோர்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். மேலும் சில அங்கன்வாடி கட்டடம் முழுமையாக சிதிலமடைந்து உள்ளது.  

ஊரகப் பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில் நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளுக்கு நிதி கிடைக்காத நிலை காணப்படுவதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அரசுப் பள்ளிகள், அரசு மையங்களை பெற்றோர்கள் நாடி வரும் நிலையில் உரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் வேறு வழியின்றி அரசு மையங்களைத் தவிர்த்து தனியார் மையங்களுக்கு செல்ல வேண்டிய  நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் மட்டுமல்ல இதே போன்று தமிழகம் முழுவதும் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளது. 

மறைமலை நகர் நகராட்சி, திருக்கச்சூர் பகுதியில், நியாய விலைக் கடை அருகே அங்கன்வாடி உள்ளது. இந்த மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த கட்டடம், மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. 

இது குறித்து, குழந்தைகளின் பெற்றோர்கள் கூறியதாவது, இந்த அங்கன்வாடி மைய கட்டடம் கட்டி, 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். இதன் காரணமாக, சுவர்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் பூச்சுக்கள் உதிர்ந்து உள்ளன. சுவர் முழுதும் பாசி படிந்துள்ளது. 

மேலும், தளத்தில் 3 மரங்கள் வளர்ந்து, கட்டடத்தில் வேர்கள் படர்ந்து உள்ளன.  கட்டடம் சிதிலமடைந்து உள்ளது. பழுதடைந்த கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments

Thank you for your comments