Breaking News

விஸ்வரூபமான ரபேல் வாட்ச் .. என் சொத்து விவரத்தை நான் வெளியிடுவேன்.. உங்களால முடியுமா? - திமுகவிற்கு சவால் விடுத்த அண்ணாமலை

 சென்னை: 

பாஜக தமிழ் மாநில தலைவர் அண்ணாமலையின் ரபேல் வாட்ச் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட திமுகவினர் கேள்வியெழுப்பி இருந்த நிலையில் இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணாமலை பதிலளித்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள், என் சொத்து விவரத்தை நான் வெளியிடுவேன்...

இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் வெளியிட தயாரா? என்றும் பதில் சவால் விடுத்து கேள்வியெழுப்பியுள்ளார்.



கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து இணையத்தில் ஒரு போஸ்ட் வேகமாகப் பரவியது. அதில், 3.48 லட்சத்திற்குக் கடிகாரம் அணியும் ஒரு ஏழை விவசாயிதான் அண்ணாமலை என்று கூறப்பட்டிருந்தது. அண்ணாமலை வாட்ச் போட்டிருக்கும் படமும், அதன் விலையும் இருக்கும் படம் இருந்தது. 

இத்தனை லட்சம் ரூபாய்க்கு அண்ணாமலை வாட்ச் வாங்கியது எப்படி. வாட்ச் வாங்கவே இவ்வளவு காசு இருக்கிறது என்றால், அவரிடம் எவ்வளவு காசு இருக்கும். இவர்தான் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவரா? என்ன கதை சொல்கிறாரா? என்று நெட்டிசன்கள், திமுகவினர் பலர் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.

இந்த போஸ்ட் ட்ரெண்டான நிலையில், இது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.... 


அதற்குப் பதிலளித்த அவர், "இப்போது புதிதாக நாம் போட்டுள்ள சட்டை, வேட்டி, காரை பற்றியெல்லாம் பேசி வருகிறார்கள். இந்தியா ரபேல் விமானங்களை ஆர்டர் செய்தது அனைவருக்கும் தெரியும். அப்போது அந்த ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு.. ரபேல் விமானத்தில் உள்ள அனைத்து பாகங்களும் இந்த வாட்ச்சில் இருக்கும். எனக்கு ரபேல் விமானத்தை ஓட்டும் பாக்கியம் கிடைக்கவில்லை.. 

நான் ஒரு தேசியவாதி.. எனவே, அந்த ரபேல் விமானத்திற்கு இணையாக இருக்கும் இந்த வாட்சை வாங்கிக் கட்டியுள்ளேன். என்னுடைய வாட்ச் 149ஆவது வாட்ச்சாகும். ரபேல் விமானத்தை உற்பத்தி செய்யும் டஸால்ட் ஏவியேஷன் தான் இந்த வாட்ச்சுகளையும் உற்பத்தி செய்கிறது. இந்த வாட்ச்சுகள் உலகில் மொத்தமே 500 தான் இருக்கிறது. எனது உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் நிச்சயம் எனது உடலில் இருக்கும். ரபேல் நிறுவனத்தின் வாட்ச்சுகளை இந்தியன் தான் வாங்குவான். 

நமது ரபேல் விமானத்தின் பாகங்களைக் கட்டியுள்ளேன். ஏனென்றால் நான் ஒரு தேசியவாதி.. பிரிவினைவாதி இல்லை.. ரபேல் நமது நாட்டிற்கு கிடைத்துள்ள பொக்கிஷம். ரபேல் விமானம் நம்மிடம் வந்த பிறகு தான் போர் யுக்திகள் மாறியுள்ளன.  இதன் காரணமாகவே சீனா நம்மிடம் வாலாட்டுவதில்லை. நமது பலம் அதிகரித்துள்ளது. இது எனது தனிப்பட்ட விவகாரம். நான் எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன்" என்று அவர் கூறியிருந்தார். 

இந்த நிலையில்.. அண்ணாமலை கட்டி இருக்கும் வாட்ச்சுக்கும்.. ரபேல் வாட்ச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி உள்ளனர். இவர் ரபேல் வாட்சையே கட்டி இருந்தால், அந்த வாட்ச் இவருக்கு கிடைத்தது எப்படி என்று கேட்டுள்ளனர். 

1 மணி நேரம் கெடு... ரசீதை வெளியிட முடியுமா?-  செந்தில் பாலாஜி கேள்வி

இதற்கிடையே இது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கான ரசீதை வெளியிட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள  Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? 

வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா?

கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?

இவ்வாறு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.  அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த போஸ்ட் தற்போது ட்விட்டரில் வேகமாகப் பரவி வகுகிறது.



திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி கேள்வி

பாஜக தலைவர் அண்ணாமலை வைத்து இருக்கும் வாட்சை அவருக்கு பரிசாக வழங்கியது யார் என்று திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி எழுப்பி உள்ள கேள்வியில், அண்ணாமலை கட்டியுள்ள watch விலை 8,00,000 மேல்.அதன் நிறுவனம் ஆடம்பர luxury watch செய்யும் bell and ross என்ற சுவிச்சர்லாந்த் நிறுவனம்! அண்ணாமலை இதில் தேசியவாதி என பெருமை கொள்ள எதுவும் இல்லை. அதன் விலையும் குறைவு இல்லை இதை இவருக்கு யார் பரிசாக கொடுத்தார் என்பது தான் கேள்வி? என்று கேட்டுள்ளார்.

இதுகுறித்து நேற்றிரவே அண்ணாமலை இதற்கு விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால், இன்று காலைதான் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து பாஜக அண்ணாமலை அளித்துள்ள  பதில் விளக்க அறிக்கையில், 

திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

நான் தமிழக பாஜகவின் தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள், 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன்.

அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன். 

நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்.

இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?. இவ்வாறு பதில் கேள்வி எழுப்பி சவால் விட்டுள்ளார்.

இந்த விவாதங்கள் தமிழக அரசியல் தளத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. 

 

No comments

Thank you for your comments