காஞ்சிபுரம் புத்தகத் திருவிழாவில் குழந்தைகள் கல்வி மையம்
காஞ்சிபுரம், டிச.26
காஞ்சிபுரத்தில் நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள்,கணிதப்புதிர்கள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்வதற்காக குழந்தைகள் கல்வி கற்பதற்கான தனியாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் புத்தகத் திருவிழா இம்மாதம் 23 ஆம் தேதி தொடங்கி வரும் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 125 புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் 14வது அரங்கில் காஞ்சிபுரம் அருகே கீழம்பலில் உள்ள ஜானஸ் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியின் சார்பில் குழந்தைகளுக்காகவே தனியாக கல்வி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இம்மையத்தில் குழந்தைகளுக்கான தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏராளமான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இப்புத்தகங்கள் எதை வேண்டுமானாலும் குழந்தைகள் இலவசமாக எடுத்துப் படிக்க அனுமதிக்கப்படுகிறது.இது தவிர மடிக்கணினி மூலம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பற்றிய பொன்மொழிகள்,அவரது வாழ்க்கை வரலாறு, கணிதப்புதிர்கள், பாடல்கள்,சிறு கதைகள் ஆகியனவற்றை கேட்டுத் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இம்மையத்தில் ஏராளமான குழந்தைகள் ஆர்வத்துடன் சென்று மடிக்கணினி மூலம் கதைகளையும், பாடல்களையும் கேட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

No comments
Thank you for your comments