தீவிர புயலாக மாறியது மாண்டஸ்: இந்திய வானிலை ஆய்வு மையம்
சென்னை:
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியுள்ளதாகவும், மணிக்கு 13 கி.மீட்டர் வேகத்தில் நகர்வதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில்,
சென்னையிலிருந்து 440 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 350 கி.மீட்டர் தொலைவிலும் மாண்டஸ் புயல் தற்போது நிலை கொண்டுள்ளது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. தற்போது மணிக்கு 13 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து, பிறகு சற்றே வலு குறைந்து புயலாக இரவு கடக்கும். வெள்ளிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக இன்று இரவு சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, நாகை, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவயம் வெளியிட்டுள்ளார்.
Click here 👉 இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு


No comments
Thank you for your comments