Breaking News

செங்கல்பட்டில் விரைவில் கட்டுமான பல்கலைக்கழகம்... அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

காஞ்சிபுரம்,நவ.22-

செங்கல்பட்டில் இந்நிதியாண்டுக்குள் கட்டுமான பல்கலைக்கழகம் தொடங்கப்பட இருப்பதாக தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.




தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை வகித்தார்.எம்எல்ஏ க்கள் க.சுந்தர்,சி.வி.எம்.பி.எழிலரசன்,கு.செல்வப் பெருந்தகை, எம்.வரலட்சுமி, எஸ்.பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தொழிலாளர் உதவி ஆணையர் பா.லிங்கேசுவரன் வரவேற்றார். விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் 2623 பயனாளிகளுக்கு ரூ.70.56லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியது..

முந்தைய திமுக ஆட்சியின் போது செங்கல்பட்டு தொழிற்பயிற்சிப் பள்ளி வளாகத்தில் கட்டுமானப் பல்கலைக்கழகம் தொடங்குவது என முடிவு செய்து அடிக்கல்லும் நாட்டப்பட்டது.அதன்பிறகு வந்த அதிமுக ஆட்சி அதை கிடப்பில் போட்டு விட்டது.இப்போது திமுக அரசு ஆட்சிக்கு வந்திருப்பதால் இந்நிதியாண்டுக்குள் செங்கல்பட்டில் கட்டுமானப் பல்கலைக் கழகம் தொடங்கப்படும்.அப்பல்கலைக்கழகத்தில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு தொழிற்பயிற்சிகள் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களின் தொழிலையும்,வாழ்வையும் பாதுகாக்க முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டதே அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியம்.திமுக ஆட்சி பொறுப்பேற்ற 18 மாதங்களில் மட்டும் 7,71,66 பேர் தமிழக அளவில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாகி இருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒரு மாதத்தில் உறுப்பினர் அட்டை வழங்கவும்,தேவையான பணப்பயன்களை 3 மாதத்தில் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.

விழாவில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்.குமார்,எம்எல்ஏ.இ.கருணாநிதி,காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவர் நித்யாசுகுமார்,துணை மேயர் ஆர்.குமரகுருநாதன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.நிறைவாக தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஆ.செண்பகராமன் நன்றி கூறினார்.

 

No comments

Thank you for your comments