தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர் சங்கம் காத்திருப்பு போராட்டம்...
காஞ்சிபுரம் :
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டு 906 கணினி உதவியாளர்களை இளநிலை உதவியாளர்களாக பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கிட போடப்பட்ட அரசாணை எண் 37 செயல்படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை கணினி உதவியாளர் சங்கம் காத்திருப்பு போராட்டம்..
தமிழகத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் 15 ஆண்டுகள் பணிபுரிந்தும் 14,000 ரூபாய் மட்டுமே மாத ஊதியமாக பெறும் 100 நாள் வேலை திட்ட கணினி உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்ய அரசாணை-37 வெளியிட்டு 5 ஆண்டுகள் ஆகியும் அமல்படுத்தாததால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை என ஆறு மாவட்டங்கள் இணைந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மண்டல பொறுப்பாளர்கள் தலைமையில் ஒரு நாள் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
காத்திருப்பு போராட்டத்தில் நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது.
கோரிக்கைகள்
1. ஊராட்சி ஒன்றியங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும்.
2. கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் உடன் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும்.
3. பணிகாலத்தில் மரணமடைந்த கணினி உதவியாளர்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவி மற்றும் கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும்.
4. கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு, குழு காப்பீடு, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அரசு சலுகைகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர் தோழர் வி.பாலாஜி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஒன்றிய பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர் முருகானந்தம், தமிழ்நாடு அரசு தட்ச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்கள் சங்கத்தின் கௌரவ பொது செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிறப்புரையாற்றினார்கள்.



No comments
Thank you for your comments