Breaking News

உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழ்... முடங்கிப் போன முயற்சி! - பாமக ராமதாஸ் கேள்வி

சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் எங்கே தமிழ்? முடங்கிப் போன முயற்சி!  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுகுறித்து  பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை மிகப்பெரிய வெற்றியாக ஒட்டுமொத்த தமிழகமும் பார்த்தது.  இதற்கான அனுமதியை  எப்படியும் பெற்றுவிட வேண்டும் என்பதில் தமிழக முதலமைச்சர் கலைஞர்  தொடக்கத்தில் மிகவும் உறுதியாக இருந்தார். அவரது செயல்களில் இருந்தே இதை அறிய முடியும்.



கலாமிடம் வலியுறுத்தல் 

சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில நாட்களில் தில்லி சென்ற தமிழக முதலமைச்சர் கலைஞர் தமது அமைச்சரவை சகாக்கள் மற்றும் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுடன் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை சந்தித்து தீர்மானத்தின் நகலை வழங்கினார். உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வேண்டும் என்று தமிழக மக்கள் அனைவரும் விரும்புவதை  குடியரசுத் தலைவரிடம் எடுத்துக் கூறிய கலைஞர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவின்படி இதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அதை ஏற்ற குடியரசுத் தலைவர் கலாம், இது குறித்த மத்திய சட்ட அமைச்சகத்தின் ஆலோசனையைக் கேட்டார்.


ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் அந்த மாநிலத்தின் ஆட்சிமொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டால் அதை மத்திய அரசு ஏற்றுக் கொள்வது தான் முறை. ஆனால், மத்திய அரசும், அப்போது மத்திய சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜும் தமிழுக்கு எதிராக அரசியல் செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும். ஆனால், மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் தேவையே இல்லாமல், தமிழக அரசு தீர்மானம் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டார்.

தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை ஆய்வு செய்த உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க முடியாது என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். ‘‘உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் பொதுவான அலுவல் மொழியைக் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பொது மொழியாக இந்தி உருவெடுக்கும் வரை ஆங்கிலம் தான் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் பொது மொழியாக நீடிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பிராந்திய மொழிகள் உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக அறிவிக்கப்படக்கூடாது’’ என்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் பரிந்துரை அளித்திருந்தார்.

காரணம் என்ன?

பிராந்திய மொழிகள் ஏன் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்கப்படக்கூடாது என்பது பற்றி தமது பரிந்துரையில் விளக்கியிருந்த நீதிபதி பாலகிருஷ்ணன்,‘‘உயர்நீதிமன்றத்தின் விசாரணைகள் மற்றும் தீர்ப்புகளில் மாநில மொழிகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழி தெரியாத நீதிபதிகளுக்கு பாதிப்பு ஏற்படும். தீர்ப்புகளையும், விசாரணை விவரங்களையும் மொழி பெயர்ப்பது அதிக செலவு பிடிக்கும் விஷயம் என்பது மட்டுமின்றி, மொழிபெயர்ப்பு துல்லியமாகவும்,  தீர்ப்பு மற்றும் ஆணையின் சாரத்தை அப்படியே பிரதிபலிப்பதாகவும் இருக்காது. அதுமட்டுமின்றி, மொழிபெயர்ப்பு பணிகள் காரணமாக அவ்வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதும், அதன்மீது விசாரணை நடத்துவதும் தாமதம் ஆகும். இதற்கெல்லாம் மேலாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வேறு மாநிலத்திலிருந்து தான் நியமிக்கப்படுவார்; பிற மாநில நீதிபதிகளும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவர். அவர்களுக்கு தமிழ் தெரியாது  என்பதால் வழக்கு விசாரணைகளை நடத்துவதில் சிரமங்கள் ஏற்படும்’’ என்று கூறியிருந்தார். ஆனால், அவை நியாயமான காரணங்கள் அல்ல.

உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ், “உச்ச நீதிமன்றத்துடன் இணைந்து இந்த கோரிக்கை குறித்து ஆராயப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள், ஆணைகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் பிராந்திய மொழியைத் தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று இந்தியத் தலைமை நீதிபதி கருதுகிறார். எனவே, உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கு சாத்தியமில்லை’’ என்று கூறியிருந்தார்.

குறைந்தது  வேகம்

தொடக்கத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதில் கலைஞர் மிகவும் ஆர்வமாக இருந்தார்.  இதுதொடர்பாக சில முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது, தமது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளித்தது, 2010ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது  என பல  நடவடிக்கைகளை அவர் எடுத்தார். ஆனால், அவை எந்த வகையிலும் பயனளிக்கவில்லை. அதுமட்டுமின்றி வேறு சில பிரச்சினைகள் காரணமாக  இந்த கோரிக்கை மீதான தமிழக அரசின் அழுத்தம் படிப்படியாக குறைந்து போனது.

உயர்நீதிமன்றங்களின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளை அறிவிக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்க முடியாது என்று  அப்போதைய சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சுதர்சன நாச்சியப்பன் போர்க்கொடி உயர்த்தினார்.

‘‘உத்தரப்பிரதேசம், பிகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களுக்கு அந்த மாநிலங்களின் ஆட்சி மொழியான இந்தியில் வழக்கு விசாரணைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டுக்கு மட்டும் அத்தகைய உரிமையை வழங்க மறுப்பது நியாயமல்ல’’ என்று அவர் வாதிட்டார்.  தமிழக அரசின் சார்பிலும் இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் கடிதங்கள் எழுதப்பட்டன. அதைத் தொடர்ந்து தமிழை சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கை கடந்த 12 ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உறங்கிக் கொண்டிருக்கிறது.

ஆக்கப்பூர்வ நடவடிக்கை இல்லை

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை பெரும் தடையாக இருப்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசின் சார்பில் ஆக்கப்பூர்வமான தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் மற்றொரு காரணம் ஆகும். தமிழை அலுவல் மொழியாக்க சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி 12 நிபந்தனைகளை விதித்திருந்தார். அவற்றில் மாநில ஆட்சி மொழி ஆணையத்தை விரைவில் உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல நிபந்தனைகள்  உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியவை ஆகும். சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 16 ஆண்டுகள் ஆகி விட்டன. இடைப்பட்டக் காலத்தில் 12 நிபந்தனைகளில் ஒருசிலவற்றையாவது  தமிழக அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், ஒரு நிபந்தனை கூட நிறைவேற்றப்படவில்லை.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு திமுக நான்கரை ஆண்டுகள் பதவியில் இருந்தது. அப்போது மாநில ஆட்சி மொழி ஆணையத்தை உருவாக்கியிருந்தால் அதைக் காரணம் காட்டி மத்திய அரசுக்கும்,  உச்சநீதிமன்றத்திற்கும் அழுத்தம் கொடுத்திருக்கலாம். ஆனால், அதை திமுக அரசு செய்யவில்லை. மாநில ஆட்சி மொழி ஆணையம் அமைக்கப்பட்டால், சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழ் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், சட்ட ஆணையத்தின் முன்னாள் தலைவருமான ஏ.ஆர்.லட்சுமணன் கூறியிருந்தார். இதுகுறித்த அவரது ஆலோசனை வருமாறு:

ஏ.ஆர்.லட்சுமணன் ஆலோசனை

நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆட்சி மொழி ஆணையத்தை பெற்றிருத்தல் வேண்டும். தமிழ்நாடு அரசு இரண்டு அல்லது மூன்று ஆணையங்களை இதற்கு முன்பு நீதிபதி அனந்த நாராயணன், நீதிபதி மகராசன் மற்றும் பிறரைக் கொண்டு அமைத்திருந்தது. புதிய ஆட்சி மொழி ஆணையத்தை அமைப்பதற்கு இது ஏற்ற நேரம். ஒரு புதிய ஆட்சி மொழி ஆணையம் அமைக்கப்பட்டு அந்த ஆணையம் - ஆங்கிலச் சட்டங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணியினை மேற்கொள்ளலாம். அவ்வாறு செய்யப்பட்டால் அதை உயர்நீதிமன்றங்களும் பிற நீதிமன்றங்களும் அதிகாரப்பூர்வமான மொழி பெயர்ப்பாக ஏற்கும். 

தமிழக அரசானது உயர்நீதிமன்றத்தில் உண்மையாகவே தமிழை ஒரு கூடுதல் மொழியாகப் புகுத்த அக்கறை காட்டுமானால், அரசானது உடனடியாக ஆட்சி மொழி ஆணையத்தை அமைத்தல் வேண்டும். அது மொழிபெயர்ப்புப் பணியையும் இதுபோன்ற பிற பணிகளையும் செய்தல் வேண்டும். தமிழை நீதிமன்றங்களில் புகுத்துவது, தமிழை நீதிமன்றங்களில் கூடுதல் மொழியாகக் கொண்டு வருவதற்கு உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். இத்துடன் இணையாக - 348 ஆம் உறுப்பில் வகை செய்யப்பட்டவாறு ஆளுநர், இந்திய அரசமைப்பின் 348 ஆம் உறுப்பிற்கிணங்க அறிக்கையினை வெளியிட முன் வருவார். மாநிலச் சட்டப்பேரவை - 348 ஆம் உறுப்பில் (3) ஆம் கூறின் படி - அதனால் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மற்றும் சட்டங்களுக்கு ஆங்கிலம் அல்லாது வேறு மொழிகளைப் பயன்படுத்தும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன் கூறியிருக்கிறார்.

ஆனால், அவரது ஆலோசனைப்படி தமிழகத்தை ஆண்ட கட்சிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஜெயலலிதாவின் அக்கறையின்மை

கலைஞர் தலைமையிலான திமுக அரசு இந்த விஷயத்தில் கடமைக்காகவாவது சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசும், அவருக்குப் பிறகு வந்த  அரசும் இதற்காக துரும்பைக்கூட  கிள்ளிப் போடவில்லை. 2006-ஆம் ஆண்டு தமிழக  சட்டப்பேரவையில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அவை நடவடிக்கைகளை  அதிமுக புறக்கணித்தது. அதுமட்டுமின்றி இந்த முயற்சியை ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார்.  

அதுமட்டுமின்றி, 2010-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வந்த குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இதை ஜெயலலிதா பயன்படுத்திக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கும் ஆணையில் கையெழுத்திடாமல் குடியரசுத் தலைவர் செம்மொழி மாநாட்டுக்கு வரக் கூடாது என்று  எதிர்ப்பு தெரிவித்தார். இதிலும் கூட அவரது நோக்கம் குடியரசுத் தலைவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தானே தவிர, உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்காக குரல் கொடுப்பது அல்ல.

குடியரசுத் தலைவர் ஆதரவு

உயர்நீதிமன்றங்களில் பிராந்திய மொழியைப் பயன்படுத்த  உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளாத நிலையில், குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் பிராந்திய மொழிக்காக குரல் கொடுத்த அதிசயம் கடந்த ஆண்டு நிகழ்ந்தது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ம் தேதி கொச்சியில் நடந்த கேரள உயர்நீதிமன்றத்தின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்று பேசிய  அவர், தீர்ப்புகள் அந்தந்த மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வழங்கப்பட வேண்டியதன் தேவையை மிகவும் தெளிவாக விளக்கினார். 

‘‘உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன. பல மொழி பேசும் மக்கள் வாழும் இந்நாட்டில் வழக்குதாரர்கள் ஆங்கிலம் அறியாதவர்களாக இருக்கலாம். அதனால் தீர்ப்பின் நுணுக்கமான விஷயங்கள் அவர்களுக்கு தெரியாமல் போகலாம். இதனால் அவர்கள்  தீர்ப்பை மொழியாக்கம் செய்ய வழக்கறிஞரையோ அல்லது வேறு நபரையோ சார்ந்திருக்க வேண்டும். இது அவர்களில் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும்’’ என்று குடியரசுத் தலைவர் கூறியிருக்கிறார்.  தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட வேண்டியதன் தேவையை இதைவிட மிகச் சிறப்பாக விளக்க முடியாது.

 குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்தின் இந்த நிலைப்பாடு பாராட்டத்தக்கது. இதற்காக அவருக்கு  பாராட்டு தெரிவித்து 30.10.2017 அன்று அறிக்கை வெளியிட்ட நான்,‘‘உயர்நீதிமன்றத்தில் பல ஆண்டுகள் வழக்கு நடத்தி, இறுதியில் நீதி வழங்கப்பட்டதற்கான ஆணை  கைகளில் இருக்கும் போது, அதில் எத்தகைய நீதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாமல் வழக்குதாரர் தவிக்கும் தவிப்பு மிகவும் கொடுமையானது. நீதிமன்றம் வழங்கிய நீதியை அறிந்து கொள்ளவும், அதனால் ஏற்படும் உணர்வுகளை அனுபவிக்கவும் மொழி தடையாக இருப்பதை ஏற்கவே முடியாது. பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்கள் வாழும் நாட்டில் அவர்களுக்கான மொழியுரிமையை வழங்காமல், ஒற்றைத் தேசம் என்ற ஒத்துவராத தத்துவத்தைக் கட்டிக் கொண்டு, அவர்களுக்கு புரியாத மொழியை  திணிப்பது மிகப்பெரிய மொழி அடக்குமுறையாகும். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில மக்கள் நீதியை பெறுவதில் மொழி மூலம் ஏற்படுத்தப்படும் முட்டுக்கட்டை எப்போதோ தகர்த்தெரியப்பட்டிருக்க வேண்டும். இப்போதாவது அந்த முட்டுக்கட்டையை தகர்ப்பதற்காக, இந்தியக் குடிமக்களின் சார்பில்  இந்தியாவின் முதல்குடிமகனே உரக்கக் குரல் கொடுத்திருப்பது உண்மையாகவே மனநிறைவளிக்கிறது.

எனது கோரிக்கை

உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் மொழியாக்கம் செய்து வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் கோரிக்கை விடுத்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோரும் இருந்துள்ளனர். குடியரசுத் தலைவரின் யோசனையையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் மதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்; அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகள் உள்ளூர் மொழியில் மாற்றம் செய்து வழங்கப்பட வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்’’ என்று கூறியிருந்தேன். 

அதிகரிக்கும் ஆதரவு

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் மட்டுமின்றி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய நீதியரசர் என்.வி.இரமணா அவர்களும், அவரது பதவிக்காலத்திலேயே இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.தில்லியில்  கடந்த 26.11.2021 அன்று நடைபெற்ற இந்திய அரசியலமைப்புச் சட்ட நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய அப்போதைய தலைமை நீதியரசர் என்.வி.இரமணா,  ‘‘உயர்நீதிமன்றங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள், வழக்காடும் மொழி, அதிக வழக்குச் செலவு ஆகியவை தான் நீதிமன்ற அமைப்பிலிருந்து   சாதாரண மக்களை அந்நியப்படுத்துகின்றன. இந்நிலையை மாற்ற தவிர்க்கப்பட வேண்டிய நடைமுறை முட்டுக்கட்டைகளை நீக்கியும், உள்ளூர் மொழி அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தும் நீதி வழங்குவதற்கான ஒட்டுமொத்த நடைமுறையையும் எளிதாக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் பல்வேறு காலகட்டங்களில் இந்த கோரிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்திருக்கிறார். கடைசியாக கடந்த 15.10.2022 அன்று குஜராத்தில் நடைபெற்ற  மாநில சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,‘‘ உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகள் அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். மக்கள் எளிதில் புரிந்து கொள்வதற்கு வசதியாக இனிவரும் காலங்களில் புதிய சட்டங்கள்  மாநில மொழிகளில் இயற்றப்பட வேண்டும்’’ என்றும் வலியுறுத்தினார்.

மாநில மொழியை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மேற்கு வங்க அரசும் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக கடந்த சில ஆண்டுகளில் பதவி வகித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா,  இரஞ்சன் கோகாய், பாப்டே, என்.வி. இரமணா போன்றவர்கள் உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரித்தவர்கள்.  எனவே, மறைந்த நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அறிவுறுத்தியதைப் போல மாநில ஆட்சி மொழி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற நமது கோரிக்கை நிறைவேறும். இதை தமிழக ஆட்சியாளர்கள் செய்வார்களா?

நாளை.... அனாதையான ஆட்சி மொழிச் சட்டம்!

இவ்வாறு  பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments