18 மாத திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு! -ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இபிஎஸ் மனு
சென்னை, நவ.24-
சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று (நவ.23) நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது 18 மாத திமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலைமை, தமிழக அரசில் நடைபெறும் வரும் ஊழல், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்டவை தொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேற்று மதியம் சென்றார். ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது. அப்போது தி.மு.க. அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய 10 பக்க மனுவை ஆளுநரிடம், எடப்பாடி பழனிசாமி அளித்தார்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு சொத்து வரி, மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்றன. இதற்கிடையே தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி வந்தார். இந்த நிலையில்தான் ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து மனு அளித்துள்ளார். தி.மு.க. அரசு மீது பல்வேறு புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது,
18 மாத கால ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க தவறியதால், தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு குறித்தும், மத்திய உளவு ஏஜென்சி 18.10.2022 அன்று முன்னதாகவே தகவல் அளித்தும் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது பற்றி விசாரித்து தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் காவல் துறை முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது ஏன் என்றும், ஏதேனும் புற அழுத்தம் ஏதாவது தரப்பட்டதா? என்றும் இதைப் பற்றி தீர ஆராய விசாரணைக்குழு ஒன்றை அமைக்க கோரப்பட்டது.
தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களின் விற்பனையும், புழக்கமும் பள்ளி, கல்லூரிகளின் வாசல்களில் ஊடுருவிச் சென்றுள்ளது. போதைப் பொருட்களுடன் தொடர்புடைய குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, முன்பை விட போதைப் பொருட்களின் புழக்கம் பெருகுவதை குறிக்கிறது.
சென்னையில் கடந்த வாரம் கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா சாதாரண மூட்டு வலிக்காக அரசு மருத்துவனையில் தவறான சிகிச்சையால் சிறுவயதிலேயே தன்னுடைய உயிரை இழந்துள்ளார். இதற்கு காரணம் அரசு மருத்துவமனைகளின் அலட்சியம் மற்றும் போதுமான உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ சோதனை வசதி, சிகிச்சைக்குத் தேவைப்படும் சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான கருவிகள் இல்லாதது தான் என்று கூறுகிறார்கள்.
உள்ளாட்சி அமைப்புகளின் செலவினங்களுக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியை அவர்கள் உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் நலத்திட்டங்களுக்காக தங்கள் விருப்ப உரிமை அடிப்படையில் செலவு. மாநிலத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், போலீசார் திறமையாக செயல்படாமல், தங்கள் பொறுப்பில் இருந்து தவறிவிடுகின்றனர்.
அரசு மருத்துவ மனைகளில் மருந்து பற்றாக்குறைக்கு ஆட்சியில் இருப்பவர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை இறுதி செய்யாததே காரணமாக அமைந்துள்ளது. மாநிலத்தில் அதிகாரப்பூர்வமாக யாருக்கும் பார் உரிமைகளை அரசு இன்னும் வழங்கவில்லை.
டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகளை ஒட்டி, சட்ட விரோதமாக பார்கள் நடத்தப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகள் முடிக்கப்பட்ட அல்லது செயல்பாட்டில் உள்ள திட்டத்தின் விவரங்களைத் தெரிவிக்கும் வகையில் பிளெக்ஸ் மெட்டீரியலில் விளம்பர பலகையை வைக்கிறது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஊழல் நடைபெற்று வருகிறது.
தற்போதைய அரசு, மழைநீர் வடிகால் பணி என்ற பெயரில், அரசு கஜானாவை மொட்டை அடித்து வருகிறது. லஞ்ச ஒழிப்புத்துறை ஒரு சுதந்திரமான ஊழல் எதிர்ப்பு விசாரணை நிறுவனமாக இருக்க வேண்டும். தி.மு.க. அரசு, ஊழல் தடுப்பு துறையை அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் பயன்படுத்துகிறது.
தற்போதைய தி.மு.க. அமைச்சர்களில் 13க்கும் மேற்பட்டவர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை கையாளும் புலனாய்வு அமைப்புகள், இந்த அமைச்சர்கள் உள்பட குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மாநில லோக் ஆயுக்தா, இப்போது முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் தலைவர் என்ற முறையில், லோக் ஆயுக்தா மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியற்றின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை கேட்டுப் பெறுமாறு தங்களைக் கோருகிறோம் தமிழகத்தில் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு அம்மாவின் அரசு சலுகை கட்டணத்தில் கேபிள் டி.வி. நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது. தற்போது அரசு கேபிள் டி.வி. கழகத்தையே முடக்க முயற்சி செய்வதாக செய்திகள் வருகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறும்போது,
“திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. இதுகுறித்து ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். காவல் துறை சரியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. கோவை சம்பவத்தை தமிழக உளவுத் துறை சரியாக கையாளவில்லை. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் வழக்கை காவல் துறை முறையாக விசாரணை செய்யவில்லை.
தமிழகத்தில் போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. டன் கணக்கில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அதிகாரிகளை இடமாற்றம் செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடாது.
அரசின் அனைத்து துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. திறமையற்ற பொம்மை முதல்வர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் தடையின்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டன. மருந்து தட்டுப்பாடு வருவதற்கு திறமையற்ற அரசாங்கம்தான் காரணம். உள்ளாட்சி பணிகளை விளம்பரப்படுத்த ரூ.350 மதிப்புள்ள பேனருக்கு ரூ.7,900 செலவிட்டுள்ளனர். உள்ளாட்சிக்கான நிதி மற்ற துறைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆளுநரை திமுக விமர்சிப்பது வாடிக்கையான ஒன்று. ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆளுநர்தான் திமுகவை தட்டிக்கேட்க வேண்டும். ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் வலியுறுத்தினோம்“ என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணை பொதுச் செயலாளர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, டி.ஜெயக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.
மேதகு தமிழக ஆளுநர் திரு.R.N.ரவி அவர்களை இன்று, மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் நேரில் சந்தித்து, 18 மாத திமுக ஆட்சியில் நடைபெறும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு.. 1(2)@rajbhavan_tn pic.twitter.com/VBR2crH5q9
— AIADMK (@AIADMKOfficial) November 23, 2022
No comments
Thank you for your comments