வெள்ள தடுப்புபணிகளை தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு நேரில் ஆய்வு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிப் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்புபணிகளை தலைமைச்செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் இன்று (29.10.2022) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குன்றத்தூர் நகராட்சிப் பகுதியில் சம்மந்தம் நகர், ஐஸ்வர்யம் நகர் மற்றும் ஸ்ரீராம் நகரில் மூடியுடன் கூடிய (Cut and cover) மழை நீர் வடிகால் கட்டும்பணி ரூ.1570.00 லட்சம் மதிப்பில் 6.5 கி.மீ நீளம் அமைக்கப்பட்டுவரும் பணியினையும் மற்றும் மேத்தா நகரில் ரூ.1100.00 லட்சம் மதிப்பில் 4.480 கி.மீ நீளம் அமைக்கப்பட்டுவரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களிடம் தற்போதைய நிலை குறித்து பணிகளை பாதுகாப்புடன் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாங்காடு நகராட்சியில் ஜனனி நகர் முதல் சண்முகானந்த சாமி கோயில் தெரு மற்றும் சீனிவாச நகர் முதல் ஓம்சக்தி நகர் வரை மூடியுடன் கூடிய மழை நீர் வடிகால் கட்டும் பணி ரூ.662.00 லட்சம் மதிப்பில் 2.97 கி.மீ நீளம் அமைக்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணியின் விவரம் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய பணியின் விவரங்களை கேட்டறிந்தார்.
மேலும் அலுவலர்களுக்கு பணியினை துரிதமாகவும், மிகுந்த கவனத்துடன் மற்றும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள வேண்டும் என ஆணையிட்டார்.
இந்நிகழ்வின்போது நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு. பா. பொன்னைய்யா, இ.ஆ.ப., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மா.ஆர்த்தி, இ.ஆ.ப., திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு. சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.




No comments
Thank you for your comments