Breaking News

தீபாவளி பண்டிகைக்கு பலகாரங்களை விதிமுறைகளுக்குட்பட்டு விற்பனை செய்ய எச்சரிக்கை..

தீபாவளி பண்டிகைக்கு தரமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் தயாரித்து பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யவேண்டும்... கலப்படம், செயற்கை நிறமி கூடாது... 



தீபாவளியை முன்னிட்டு இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பாக உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.

உணவு பாதுகாப்பு துறையின்  மூலம் பதிவு (அ)  உரிமம்  பெற்றிருக்க வேண்டும்


தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் காரவகைகளுக்கு சீட்டு நடத்துபவர்கள், தற்காலிகமாக திருமண மண்டபங்களில் பெரிய அளவில் இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உள்பட அனைத்து இனிப்பு கார வகைகள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் விதிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், இனிப்பு, கார வகைகள் மற்றும் பேக்கரி உணவு பொருட்களை தயாரிப்பவர்கள் தரமான மூலப் பொருட்களைக் கொண்டு தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.


உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான செயற்கை நிறமிகளையோ உபயோக்கிக்கக் கூடாது. இனிப்பு, கார வகைகளை தயாரிக்கும் உணவை கையாள்பவர்கள் முழு உடல் நலத்துடன் தொற்று நோய்கள் இல்லா வண்ணம் பணியில் அமர்த்தப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மறுபடியும் சூடுபடுத்தி உணவு தயாரிக்க பயன்படுத்தக்கூடாது.

முறையான பயிற்சி, பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவரச் சீட்டு இடும் பொழுது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்படவேண்டும். 


விற்பனைக்காக காட்சிப்படுத்தப்படும் தட்டுகளில் இனிப்பு வகைகளை தயாரித்த தேதி மற்றும் உபயோகிக்கும் காலம் ஆகியவை பொதுமக்கள் அறியும் வண்ணம் அச்சடித்து காட்சிப்படுத்தவேண்டும். உணவு பொருட்களை விற்பனை செய்த பின்னர் வழங்கும் ரசீது, பில்களில் உணவு அங்காடியின் உரிமம் எண் அல்லது பதிவு எண்ணை அச்சடித்து இருத்தல் வேண்டும்.

உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யவேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக http://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006ன் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு உரிமம் பெற்றுக் கொள்ளவேண்டும். மேலும் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற்றிருக்கவேண்டும்.

இது தொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் 94440 423222 என்ற வாட்ஸ் அப் புகார் எண்ணிற்கு பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments