நவ.1ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற நவம்பர் 01-ம் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கீழ்கண்ட நிகழ்வுகள் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபைக் கூட்டங்கள் நடத்துதல்
உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நவம்பர் 1 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திட வேண்டும். இந்த கிராம சபைக் கூட்டத்தல், அவ்வூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களைக் குறித்து முழுமையாக விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
கிராம சபைக் கூட்டங்களில் ஏதேனும் ஒரு ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் கூட்டப்பட்டு நலத்திட்ட உதவிகள் பல்வேறு துறை பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும்.
கண்காட்சி நடத்துதல்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகள் குறித்த கண்காட்சிகள் நடத்தலாம்.
மேலும் அங்கு அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
ஊழியர்களை அங்கீகரித்தல்
கிராம ஊராட்சி அளவில் சிறப்பாக பணிபுரிந்த தூய்மைக் காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டுத் தெரிவிக்கப்பட வேண்டும்.
கலந்துரையாடல்கள் நடத்துதல்
உள்ளாட்சி தினத்தினை கொண்டாடும் விதமாக சிறப்பாக செயலாற்றிய, பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்ட, பசுமை மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்து அந்த ஊராட்சியின் வருவாயினை அதிகரித்து அதன் பலனை ஊராட்சிக்கு சரியான வகையில் பயன்படுத்திய கிராம ஊராட்சி தலைவர்களைக் கொண்டு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் கருத்து பட்டறைகள் போன்றவற்றை நவம்பர் முதல் வாரத்தில் வளர்ச்சி மற்றும் ஊராட்சி பயிற்சி நிறுவனம் மண்டல பயிற்சி நிறுவனங்கள் மூலம் நடத்திட ஏற்பாடு செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments