பரந்தூர் விமான நிலைய: தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து பேசுவோம்.... ஜி.கே.மணி
காஞ்சிபுரம்,செப்.4
பரந்தூரில் விமான நிலையம் அமைவிடமானது பல விளைநிலங்களையும்,குடியிருப்புகளையும் பாதிப்பதாக மக்கள் தெருவித்திருப்பதை பாமக சார்பில் விரைவில் நேரில் தமிழக முதல்வரை சந்தித்து பேசுவோம் என அக்கட்சியின் கௌரவத்தலைவர் ஜி.கே.மணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
காஞ்சிபுரம் அருகே பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களின் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி அக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் பாமக சார்பில் கிராம மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த வாரம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.அப்போது பேசிய அவர் பாமக கௌரவத்தலைவர் ஜி.கே.மணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு விமான நிலையம் அமையவுள்ள இடங்களில் நேரில் ஆய்வு செய்யும். அக்கிராமங்களில் வசிக்கும் மக்களிடம் அந்தந்த கிராமங்களில் நேரில் சந்தித்தும் கருத்துக்களை கேட்டறியும் என்று பேசியிருந்தார்.
இதன்படி விமான நிலையம் அமையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பாமக கௌரவத்தலைவர் ஜி.கே.மணி,முன்னாள் ரயில்வேத்துறை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட 7 பேர் அடங்கிய குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.விளைநிலங்களைப் பார்வையிட்டதுடன் கிராமத்து மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தனர்.
இதன் பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது..
விமான நிலையம் அமைய பெரும்பாலான கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.தங்களது வாழ்வாதாரம் பாதித்து விடும் என்கிறார்கள்.இதே போல தொழிற்சாலைகள் அமைப்பதற்காக இப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்திய போது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் யாருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.ஏராளமான பசுமையான விளைநிலங்களும், குடியிருப்புகளும் பாதிக்கப்படுகிறது.
இது குறித்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ்க்கு தெரிவிப்போம்.பின்னர் பாமக சார்பில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து பேசி நிலைமையை விளக்குவோம் என்றும் ஜி.கே.மணி தெரிவித்தார்.


No comments
Thank you for your comments