கொலை செய்யப்பட்ட இளம்பெண் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
டேராடூன்:
அங்கிதா பண்டாரி கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பத்திரமாக உள்ளதாகவும், அதை அழிக்க எந்த முயற்சியும் நடக்காது எனவும் உறுதியளித்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தமி கொலையான அங்கிதாகுடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவியை அறிவித்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கிட் ஆர்யாவுக்கு சொந்தமாக ரிஷிகேஷில் சொகுசு விடுதி உள்ளது.
இந்த சொகுசு விடுதியில் அங்கிதா பண்டாரி என்ற பெண் வரவேற்பாளரை புல்கிட் மற்றும் சொகுசு விடுதி மேலாளர், உதவி மேலாளர் ஆகியோர் கொலை செய்து அருகில் உள்ள ஓடையில் வீசியதாக கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த கொலை சம்பவம் அங்கிதாவின் சமூக வலைதள நண்பர் ஒருவரின் மூலமாக வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான அந்த மூவரையும் போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அம்மாநில முதல்வரின் உத்தரவின் பெயரில் சொகுசு விடுதியின் சில பகுதிகள் இடிக்கப்பட்டன. இதனால் ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், கட்டிடத்தை இடிப்பதற்கு முன்பே அனைத்து ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தனது மகளின் இறுதிச்சடங்கு அவசர அவசரமாக நடத்தப்பட்டதாகவும், அதில் தன்னைக் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை என்றும் அங்கிதாவின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், அங்கிதா பண்டாரி கொலை தொடர்பான அனைத்து ஆதாரங்களும் பத்திரமாக உள்ளதாகவும், அதை அழிக்க எந்த முயற்சியும் நடக்காது எனவும் உறுதியளித்த உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தமி கொலையான அங்கிதா குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி உதவியை அறிவித்தார்.
மேலும், இந்த கொலை வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் எனவும் நீதி நிலைநாட்டப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணையில் சொகுசு விடுதியின் முன்னாள் ஊழியர்கள், அந்த விடுதியில் நடந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து சாட்சியளித்துள்ளனர். அதில், “அந்த விடுதியில் பாலியல் தொழில், போதைப்பொருட்கள் புழக்கம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தன.
விடுதி உரிமையாளரான புல்கித் ஆர்யா அடிக்கடி சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருவார். அதேபோல் அடையாளம் தெரியாத பெண்களும் அழைத்து வரப்படுவார்கள். அந்தப் பெண்கள் சிறப்பு விருந்தினர்களுடன் இருப்பார்கள். அவர்களுக்கு புல்கித் ஆர்யாவினால் ஏற்பாடு செய்யப்படிருக்கும் உயர் ரக மதுவுடன் கஞ்சா போன்ற போதைப்பொருட்களும் வழங்கப்படும்" என்று தெரிவித்தனர்.

No comments
Thank you for your comments